ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் டி20 உலகக்கோப்பை போட்டியில் கோப்பையை வெல்லும் அணிகளுள் ஒன்றாக பாகிஸ்தான் அணி கருதப்பட்டது
தரவரிசையின் அடிப்படையில் சூப்பர்12 சுற்றுக்கு நேரடியாக தகுதிபெற்ற பாகிஸ்தான் குரூப் 2வில் இந்தியா, தென்னாப்பிரிக்கா, பங்களா தேஷ், ஜிம்பாவே, மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகளுடன் இடம் பெற்றது.
2 ஆட்டங்களிலும் தோல்வி!
முகமது ரிஸ்வான், கேப்டன் பாபர் அசாம், ஷஹீன் அப்ரிடி, ஹரிஸ் ராப் போன்ற உலகத்தரம் வாய்ந்த வீரர்களுடன் நடப்பு உலகக்கோப்பையில் கம்பீரமாக களமிறங்கியது பாகிஸ்தான்.
எனினும் எதிர்பார்ப்புக்கு முற்றிலும் மாறாக இந்தியா மற்றும் ஜிம்பாவே அணிக்கு எதிராக இறுதிவரை போராடி பரிதாபமாக பாகிஸ்தான் தோற்றுள்ளது.
இதன் காரணமாக புள்ளிப்பட்டியலில் நெதர்லாந்துக்கு இணையாக ஒரு புள்ளிகள் கூட இன்றி பாதாளத்திற்கு தள்ளப்பட்டுள்ளது பாகிஸ்தான். இதனால் சொந்த நாட்டு ரசிகர்களே அந்த அணியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
தோல்விக்கு காரணம் என்ன?
உலகக்கோப்பை ஆட்டத்தில் அடுத்தடுத்து அந்த அணி 2 தோல்விகளை சந்தித்து உள்ளதற்கு பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன.
பாகிஸ்தான் அணியின் முன்னணி வீரர்கள் தொடர்ந்து சொதப்பி வருவது தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
நடந்து முடிந்த இரு போட்டிகளில் கேப்டன் பாபர் அசாம் மொத்தமே 4 ரன்கள் தான் எடுத்துள்ளார். அதிலும் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் டக் அவுட் ஆனது குறிப்பிடத்தக்கது.
மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ரிஸ்வான் மொத்தம் 18 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
அதேபோல் பாகிஸ்தான் அணி பெரிதும் நம்பிய ஷஹீன் அப்ரிடியின் பந்துவீச்சு உலகக்கோப்பையில் சுத்தமாக எடுபடவில்லை. இரு ஆட்டங்களிலும் அப்ரிடி இதுவரை ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை. மேலும் இரு போட்டிகளிலும் அதிக ரன்களை வழங்கிய பந்துவீச்சாளராகவும் அவர் உள்ளார்.
இவ்வாறு முன்னணி வீரர்களின் பொறுப்பற்ற ஆட்டமே அவர்களின் தொடர் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைத்துள்ளது.
அரையிறுதி வாய்ப்பு உள்ளதா?
இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் அரையிறுதி வாய்ப்பு நழுவியுள்ளதாக ரசிகர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
உண்மையில் பாகிஸ்தான் அணி அரையிறுதி போட்டிக்கு தகுதிபெறும் வாய்ப்பு இன்னும் முற்றிலுமாக அழிந்துவிடவில்லை.
அதன்படி அரையிறுதியிக்கு செல்வதற்கு மீதமுள்ள 3 போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி மிகப்பெரும் ரன்ரேட் வித்தியாத்தில் வெற்றி பெற வேண்டும்.
அந்த அணி அக்டோபர் 30 ஆம் தேதி நெதர்லாந்தையும், நவம்பர் 3 ஆம் தேதி தென்னாப்பிரிக்காவையும் மற்றும் நவம்பர் 6 ஆம் தேதி வங்கதேசத்தையும் எதிர்கொள்கிறது.
இந்த போட்டிகளில் வெல்லும்பட்சத்தில் பாகிஸ்தான் அணிக்கு 6 புள்ளிகள் கிடைக்கும். இருந்தாலும் இந்த மூன்று வெற்றிகள் மட்டும் போதாது.
மற்ற அணிகளின் முடிவுகளும் முக்கியம்!
குரூப் 2வில் இருக்கும் மற்ற அணிகளின் முடிவுகளும் பாகிஸ்தானின் அரையிறுதி வாய்ப்புக்கு முக்கிய காரணியாக உள்ளன.
இந்தியா, தென்னாப்பிரிக்கா அல்லது ஜிம்பாப்வே ஆகிய அணிகளுக்கு இன்னும் 3 போட்டிகள் கைவசம் உள்ளன.
இதில் தலா இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெற்றால், ஆறு புள்ளிகளுக்கு மேல் அவை பெற்றுவிடும். இதனால் பாகிஸ்தான் தொடரில் இருந்து வெளியேறும் சூழ்நிலைக்கு தள்ளப்படும்.
இந்தியா வெற்றி பெற வேண்டும்!
அதேநேரத்தில் பாகிஸ்தான் மீதமுள்ள 3 போட்டிகளிலும் வென்று தென்னாப்பிரிக்கா மற்றும் ஜிம்பாவே அணிகள் அடுத்துவரும் மூன்றில் 2 ஆட்டங்களில் தோல்வியை தழுவினால் பாகிஸ்தான் அரையிறுதிக்கு செல்ல வாய்ப்பு உள்ளது.
அந்த வகையில் பாகிஸ்தானின் வாய்ப்புக்கு இந்தியாவின் வெற்றி இன்றியமையாதது ஆகும்.
ஏனெனில் பாகிஸ்தானுக்கு தற்போது போட்டியாக உள்ள தென்னாப்பிரிக்கா அணி நாளையும், பங்களாதேஷ் நவம்பர் 2ம் தேதியும், ஜிம்பாவே நவம்பர் 6ம் தேதியும், இந்திய அணியை சந்திக்க உள்ளன.
இதில் அனைத்து ஆட்டங்களையும் இந்தியாவே வெல்ல வேண்டும். ஏனெனில் போட்டி அணிகள் வெல்லும் பட்சத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றால் கூட அது விழலுக்கு இறைத்த நீர் கதை தான்.
எனவே மீதமுள்ள 3 போட்டிகளிலும் இந்தியா மிகப்பெரும் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்பதே கிரிக்கெட் களத்தில் பரம வைரியான பாகிஸ்தானின் பிரார்த்தனையாக இருக்கும் என்பது மறுக்க முடியாத ஒன்றாகும்.
கிறிஸ்டோபர் ஜெமா
கோவை சம்பவம்: அண்ணாமலையின் அபத்தங்கள் – டிஜிபி காட்டம்!
தேவர் ஜெயந்தி விழா: போக்குவரத்து மாற்றம்!