உலகமே இன்று பெண்களால் ஆளப்படுகிறது என்பதற்கு ஏற்ப இன்று கல்வி, அரசியல், ஆன்மீகம், விளையாட்டு, சினிமா வேலைவாய்ப்பு என அனைத்திலும் பெண்களின் ஆதிக்கம் மேலோங்கி வருகிறது.
அதற்கு எடுத்துக்காட்டாக சுற்றுசூழலுக்காக போராடி வரும் ஸ்விட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த கிரெட்டா தன்பெர்க் முதல் நம் நாட்டின் குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு வரை எத்தனையோ உதாரணங்களை சொல்லலாம்.
ஆனால் அண்டை நாடுகளான பாகிஸ்தான், சவுதி அரேபியா, ஈராக், ஈரான் உள்ளிட்ட நாடுகளில் பெண்கள் மீதான அடக்குமுறையும், கட்டுப்பாடும் இன்றும் தொடர்ந்து வருவது வேதனைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.
குறிப்பாக ஆணாதிக்கமும், பழமைவாத சிந்தனையும் கொண்ட தாலிபான்கள் கைப்பற்றிய ஆப்கானிஸ்தானில் தற்போது பெண்களுக்கு எதிரான கல்வி, வேலைவாய்ப்பு பறிக்கப்பட்டது உலகளவில் அதிருப்தியை ஏற்படுத்தியது.
ஆனால் இந்த ஆணாதிக்க சமூக கட்டுப்பாடுகளுக்கு எதிரான நம்பிக்கையின் ஒளிக்கீற்றாக வெளிச்சம் கொண்டு வந்துள்ளார் பாகிஸ்தான் நாட்டின் முதல் அழகி பட்டம் வென்ற எரிகா ராபின்.
யார் இந்த எரிகா ராபின்?
வீட்டை விட்டு வெளியே வந்து, சமூகத்தில் சாதாரணமாக தங்களை அடையாளப்படுத்துவதற்கே கடினமாக உள்ள பாகிஸ்தான் நாட்டின் கராச்சியை சேர்ந்தவர் 24 வயதான எரிகா ராபின்.
கடந்த 1999ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் தேதி கராச்சியில் ஒரு கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தவர் எரிகா ராபின்.
அவர் செயின்ட் பேட்ரிக் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். பின்னர் சண்டிகரில் உள்ள அரசு வணிகவியல் மற்றும் வணிக நிர்வாகக் கல்லூரிக்குச் சென்றார்.
பாகிஸ்தானின் திவா(DIVA ) இதழின் அட்டைப்படத்தில் தோன்றியதன் மூலம் கடந்த 2020ஆம் ஆண்டு முதன்முறையாக தனது தொழில்முறை மாடலிங் வாழ்க்கையைத் தொடங்கினார்.
தொடர்ந்து பேஷன் உலகில் மாடலாக கால்பதித்த எரிகா, காதி, ஜாரா ஷாஜஹான், சானியா மஸ்கதியா, எலன் மற்றும் சனா சஃபினாஸ் போன்ற பாகிஸ்தானின் பல்வேறு முன்னணி பிராண்டுகளின் அடையாளமாக மாறினார்.
இதற்கிடையே கராச்சியில் உள்ள ஐடி ஆலோசனை நிறுவனமான ஃப்ளோ டிஜிட்டல் நிறுவனத்தில் உதவி மேலாளராகவும் பணிபுரிந்து வருகிறார்.
👑 A historic moment! Karachi's #EricaRobin takes home the inaugural Miss Universe Pakistan 2023 title, paving the way to showcase Pakistan's vibrant culture on the global stage. #MissUniverse2023
Get to know more about this groundbreaking event here: https://t.co/HUYHf2VM2J pic.twitter.com/B1BX4CByvK
— Photo News (@PhotoNewsPk) September 15, 2023
நாட்டுக்கு முதல் பட்டம்!
இந்த நிலையில்இவர் கடந்த வாரம் மாலத்தீவு ரா அட்டோலில் நடைபெற்ற மிஸ் யூனிவர்ஸ் பாகிஸ்தான்’ போட்டியில் மாடல் அழகியாக மகுடம் சூடினார்.
இதன்மூலம் பாகிஸ்தான் நாட்டிலிருந்து ’முதல் உலக அழகி பட்டம்’ வென்ற மாடலாக சர்வதேச அரங்கில் அடியெடுத்து வைத்துள்ளார் எரிகா.
இதனைத்தொடர்ந்து இந்த ஆண்டு நவம்பரில் எல் சால்வடாரில் நடைபெறும் 72வது குளோபல் மிஸ் யுனிவர்ஸ் போட்டியிலும் பங்கேற்க உள்ளார். இதனால் அந்த போட்டியில் பாகிஸ்தான் சார்பில் பங்கேற்கும் முதல் மாடல் என்ற பெருமையை பெற உள்ளார்.
எரிகாவுக்கு எதிராக அரசு!
எனினும் பாகிஸ்தான் வரலாற்றில் முதல் மாடலாக இடம்பிடித்த எரிகாவுக்கு எதிராக அவரது சொந்த நாட்டிலேயே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
ஆழ்ந்த பழமைவாத பாகிஸ்தானில் உள்ள மதத் தலைவர்கள், எரிகா பாகிஸ்தானை அவமதித்து விட்டதாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.
மாலத்தீவில் போட்டியை ஏற்பாடு செய்தவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இஸ்லாமிய அறிஞர் தகி உஸ்மானி கோரிக்கை விடுத்துள்ளார்.
அதனையடுத்து தற்காலிகப் பிரதமர் அன்வார்-உல்-ஹக் கக்கர், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு எதிராக விசாரணையைத் தொடங்குமாறு நாட்டின் உளவுத்துறை நிறுவனத்திடம் கேட்டுக்கொண்டதாக இன்டிபென்டன்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
இதன்மூலம் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ள மிஸ் யூனிவர்ஸ் போட்டியில் எரிகா பங்கேற்பாரா? அவரை பங்கேற்க பாகிஸ்தான் அரசு விடுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளது.
எரிகா என்ன சொல்கிறார்?
இதுகுறித்து பேசியுள்ள எரிகா ராபின், “உலக அழகி போட்டியில் பாகிஸ்தான் பங்கேற்பது இதுவே முதல் முறையாக இருக்கும் என்பதால் தன் தோள்களில் நிறைய பொறுப்பை உணர்கிறேன்.
இருப்பினும், நாட்டின் நற்பெயருக்கு தீங்கு விளைவிக்கும் எதையும் நான் செய்யமாட்டேன்” என்று அவர் கூறியுள்ளார்.
நம்பிக்கை வெளிச்சத்தை தொடர்வாரா?
இந்தியாவில் இருந்து இதுவரை 6 பேர் உலக அழகி பட்டம் வென்றுள்ள நிலையில், நம் சகோதர நாடான பாகிஸ்தானில் இருந்து இப்போது தான் முதல் பட்டம் வாங்கி உலக மேடையில் கால் பதித்துள்ளது.
எனினும் எரிகா ராபின் பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மை கிறிஸ்தவ சமூகத்தை சேர்ந்தவர் என்பதாலும், பெண் என்பதாலும் அவருக்கு எதிராக நடவடிக்கைகள் ஆரம்பித்துள்ளது அந்நாட்டு அரசு.
எனினும் பழமைவாத சிந்தனைகளால் ஊறியுள்ள அந்நாட்டின் கட்டுப்பாடுகளுக்கு எதிரான, பெரும்பான்மை சமூகமான இஸ்லாமிய பெண்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வெளிச்சமாக உருவெடுத்துள்ளார் எரிகா ராபின்!
கிறிஸ்டோபர் ஜெமா
மகளிர் இடஒதுக்கீடு மசோதா: சோனியா காந்தி தலைமையில் இன்று விவாதம்!
மகளிர் இட ஒதுக்கீடு: மோடி அரசின் மாபெரும் ஏமாற்று