நாங்கள் சைனா ஃப்ளட்லைட்டுகளை அனுப்பட்டுமா? பாக். நக்கல்!

Published On:

| By Kumaresan M

இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி, ஒடிசாவின் கட்டாக்கில் உள்ள பராபதி மைதானத்தில் நேற்று (பிப்ரவரி 10) நடந்தது. இந்த ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

இந்திய பேட்டிங்கின் போது, 7வது ஓவரில் ஃப்ளட்லைட்டுகள் மினுமினுக்கத் தொடங்கி முற்றிலுமாக அணைந்து போனது. பின்னர், தொழில்நுட்ப வல்லுநர்கள் அதை சரிசெய்தனர். 30 நிமிடங்களுக்கு பிறகு போட்டி தடையில்லாமல் நடைபெற்றது.

இந்த போட்டிக்கு ஒரு நாள் முன்னதாக லாகூர் கடாஃபி மைதானத்தில் நடந்த போட்டியில் நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்த்ரா பந்து தாக்கியதில் தலையில் பலத்த காயமடைந்தார். கடாஃபி மைதானத்தில் பொருத்தப்பட்டிருந்த பிளட்லைட் காரணமாக கண் பார்வை மங்கி பந்தை சரியாக கணிக்க முடியாமல் ரச்சின் காயமடைந்ததாக சொல்லப்பட்டது. அப்போது, தரமற்ற எல்.இ.டி விளக்குகளை வாங்கியிருப்பதாக இந்திய ரசிகர்கள் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டை விமர்சித்தனர்.

இந்த நிலையில், கட்டாக் மைதானத்தில் ப்ளட்லைட்டுகள் எரியாமல் போனதால் பாகிஸ்தான் ரசிகர்கள் பதிலுக்கு பிசிசிஐ அமைப்பை நக்கல் செய்து வருகின்றனர். கடாஃபி மைதானத்தில் பொருத்தப்பட்டுள்ளதை போன்ற ஃப்ளட்லைட்டுகளை வாங்கி பொருத்துங்கள். உலகின் பணக்கார கிரிக்கெட் சங்கம் நல்ல லைட்டுகளை வாங்க நிதி ஒதுக்க வேண்டும். நாங்கள் வேண்டுமென்றால் நல்ல தரமான சீன ஃப்ளட் லைட்டுகளை வாங்கி அனுப்பட்டுமா? என்று கேலி செய்துள்ளனர்.

இதற்கிடையே, ஃப்ளட் லைட் 30 நிமிடங்கள் எரியாமல் போனதால் அடுத்து சர்வதேச போட்டிகளை நடத்தும் வாய்ப்பை ஒடிசா கிரிக்கெட் சங்கத்துக்கு வழங்கக்கூடாது என்று இந்திய ரசிகர்கள் கூறி வருகின்றனர். இது தொடர்பாக ஒடிசா கிரிக்கெட் சங்கத்திடம் ஒடிசா அரசு விளக்கமும் கேட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share