டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் அசாமின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் முக்கியமான போட்டி இன்று (ஜூன் 11) நடைபெற உள்ளது.
டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற்று வருகிறது.
பாகிஸ்தானுக்கு முக்கியமான போட்டி
இன்று (ஜூன் 11) நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தான் – கனடா அணிகள் மோதுகின்றன.
டி20 உலகக்கோப்பை போட்டிகளில் 2009ஆம் ஆண்டு சாம்பியன் பட்டத்தை பெற்ற அணி பாகிஸ்தான். இதன் மூலம் உலகக்கோப்பை வரலாற்றில் சிறப்பாக விளையாடிய அணிகளில் ஒன்றாக பாகிஸ்தான் இருந்தது.
2022ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரின் போது இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளிடம் தோல்வியை தழுவினாலும் பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டி வரை வந்தது.
தற்போதும் அதே நிலையில்தான் பாகிஸ்தான் அணி உள்ளது. நடப்பு டி20 உலகக்கோப்பை போட்டியில் இன்னும் வெற்றி கணக்கை தொடங்காத பாகிஸ்தான் அணி இன்று கனடாவை எதிர்கொள்கிறது.
இந்த போட்டியில் பாகிஸ்தான் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால், அணியின் ரன்ரேட் உயர்வதோடு, சூப்பர் 8 சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு அதிகமாகும்.
முன்னதாக, இந்திய நேரப்படி ஜூன் 9ஆம் தேதி நியூயார்க் மைதானத்தில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்தது. அதே மைதானத்தில் இன்று கனடாவை எதிர்கொள்கிறது பாகிஸ்தான் அணி.
டி20 உலகக்கோப்பை தொடரில் உள்ள கனடா அணி பலமான அணியாக உள்ளது. அமெரிக்காவிற்கு எதிரான முதல் போட்டியில் கனடா அணி பெரிய இலக்கை நிர்ணயித்தது. மேலும், அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் கனடா அணி 137 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இன்று நடைபெறும் போட்டியில் கனடா அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து, அதிக ரன்களை இலக்காக நிர்ணயித்தால் பாகிஸ்தான் அணி வெற்றி பெறுவது கடினம்தான்.
பாகிஸ்தான் அணியை பொறுத்தவரை தொடக்க வீரராக சையது அயுப் களமிறங்க வாய்ப்புள்ளது. கனடா அணியில் உள்ள நிக்கோலோ ஸ்க்ரிட்டன் என்ற வீரர் நேபாள் அணிக்கு எதிரான போட்டியில் 52 ரன்களும், அமெரிக்காவிற்கு எதிரான போட்டியில் 51 ரன்களும், அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் 49 ரன்களும் எடுத்து பார்மில் உள்ளார்.
டி20 உலகக்கோப்பை வரலாற்றில் பாகிஸ்தான் அணி தொடர்ந்து 3 போட்டிகளில் தோற்றது இல்லை. இதனால், பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாமின் தலை எழுத்து இன்றைய ஆட்டத்தின் மூலம் தான் தீர்மானிக்கப்படும். எனவே, பாகிஸ்தான் அணிக்கு இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஆட்டமாகும்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…