இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி போன்றே, பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
அண்மையில் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி, அவ்வணியை 3-0 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. தனது சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணி, ஒயிட்-வாஷ் ஆவது இதுவே முதல்முறையாகும்.
ஏற்கெனவே, ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பையையும் இங்கிலாந்து அணியிடம் பறிகொடுத்த நிலையில், பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் அனைவராலும் கடும் விமர்சனத்துக்குள்ளாகி வருகிறார். குறிப்பாக, பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் அவரைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இதுபோல்தான் விராட் கோலி இந்திய அணியின் கேப்டனாக இருந்தபோது சோபிக்காத நிலையில், அவர்மீதும் விமர்சனங்கள் வைக்கப்பட்டன. இதையடுத்து, அவருடைய கேப்டன் (ஒருநாள் மற்றும் டி20) பதவியை இந்திய கிரிக்கெட் போர்டு பறித்தது. மேலும் விமர்சனம் எழுந்ததால், டெஸ்ட் கேப்டன் பதவியையும் ராஜினாமா செய்தார்.
ஆனால், அதற்குப் பிறகு தன்னுடைய விளையாட்டில் கவனம் செலுத்தி ஒருசில சாதனைகளையும் படைத்தார். விராட் கோலி மீது என்ன விமர்சனம் வைக்கப்பட்டதோ, அதே விமர்சனம்தான் தற்போது பாபர் அசாம் பக்கமும் திரும்பியிருக்கிறது. ஆனாலும் அதைப் பற்றி அவர் கவலைப்படவில்லை.
தன்மீது வைக்கப்படும் விமர்சனம் குறித்து மெளனம் கலைத்த பாபர் அசாம், ”தொடர் தோல்விகளால் நிறைய விஷயங்கள் மாறிவிட்டன. துறைசார்ந்த நபராக இதுபோன்ற சூழ்நிலைகளை பலரும் கடந்து வந்திருப்போம். ஆனால், களத்தில் உழைப்பைக் கொடுப்பதும், அணிக்காக எங்களால் முடிந்தவரை சிறப்பாகச் செயல்படுவதும்தான் முக்கியமான வேலை.
அந்த விஷயங்கள் களத்திற்கு வெளியே நடைபெறுகின்றன. அடுத்து வரும் டெஸ்ட் தொடரில் ஒரு நல்ல தொடக்கம் பெறுவது மற்றும் அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக செயல்படுவது எப்படி என்பதில் எங்களது கவனம் உள்ளது.
கடந்த தொடரில் அவர்கள் சிறிய தவறுகளை மட்டுமே செய்ததால் எங்களால் சிறப்பாக செயல்பட முடியவில்லை. ஆனால் அந்த தவறுகளை சரிசெய்ய நாங்கள் எதிர்நோக்கியுள்ளோம்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், பாகிஸ்தான் அணி அடுத்தடுத்து தொடர் தோல்விகளை சந்தித்ததன் காரணமாக அந்நாட்டு கிரிக்கெட் சம்மேளன தலைவர் ரமீஸ் ராஜா, அப்பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். அத்துடன் அந்நாட்டு கிரிக்கெட் போர்டு புதிய தலைவராக நஜாம் சேத்தி நியமிக்கப்பட்டார். ரமீஸ் ராஜா, கேப்டன் பாபர் அசாமுக்கு முழு ஆதரவு தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து, புதிய தலைவராகப் பதவியேற்ற நஜாம் சேத்தியிடம், பாபர் அசாம் கேப்டன்ஷிப் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், “பாகிஸ்தானின் நட்சத்திர வீரர்களில் பாபர் அசாமும் ஒருவர்.
அவர் பாகிஸ்தான் மண்ணின் மகன். அவர் இல்லாமல் பாகிஸ்தான் அணி எப்படி இருக்கும்? அவர் எங்கள் இதயங்களில் இருக்கிறார். எப்போதும் அங்கேயேதான் இருப்பார்” எனத் தெரிவித்திருந்தார்.
ஆம், நஜாம் சேத்தி சொன்னபடி, அவரது நம்பிக்கையைக் காப்பாற்றி இருக்கிறார் பாபர் அசாம். தற்போது நடைபெற்று வரும் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில், முதல் இன்னிங்ஸில் 161 ரன்கள் எடுத்துள்ளதுடன், அணியும் வலுவான ரன்கள் எடுக்க உதவியுள்ளார்.
அவ்வணி முதல் இன்னிங்ஸில் 10 விக்கெட் இழப்புக்கு 430 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து, இந்த தொடரையோ அல்லது இந்தப் போட்டியையோ பாகிஸ்தான் அணி வென்றால், பாபர் அசாம் விமர்சனங்களில் இருந்து விலகி நிற்பார்.
ஜெ.பிரகாஷ்
இந்தியாவுக்கு ஆதார்: தமிழகத்துக்கு ’மக்கள் ஐடி’!
“ஆண்டிகள் சேர்ந்த மடம்” – ஓபிஎஸ், சசிகலா குறித்து விமர்சித்த ஜெயக்குமார்