விராட் கோலிக்கு பாகிஸ்தானிலிருந்து வந்த ஆதரவு குரல்!

விளையாட்டு

கிரிக்கெட்டில் தடுமாறி வரும் விராட்கோலிக்கு ஆதரவாகப் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமின் டிவிட்டர் பதிவு பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இந்திய அணி தனது கிரிக்கெட் வரலாற்றில் எத்தனையோ தலைசிறந்த வீரர்களை அடையாளம் கண்டுள்ளது. கபில்தேவ், கவாஸ்கர், கங்குலி, சச்சின், சேவாக், தோனி என நீளும் பட்டியலில் விராட் கோலியின் பெயருக்கும் நிச்சயம் இடமுண்டு. நவீன கிரிக்கெட்டின் மிகச் சிறந்த வீரர்களில் ஒருவர் கோலி. சேஸ் மாஸ்டர், ரன் மெஷின், ஒண்டே பிராட்மேன் என்று ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். சச்சின் சாதனைகளை மட்டுமே பத்திரிக்கைகள் சொல்லிக் கொண்டிருக்கும் போது, அவருக்குப் பின் யார் என்று கேள்விக்கு விடையாக கிரிக்கெட்டுக்கு வந்தவர் விராட் கோலி. சச்சின் சாதனைகளை முறியடிக்கும் வகையில் பல அபாரமான இன்னிங்ஸ்களை ஆடியுள்ளார் கோலி. அப்போது அவரை போற்றி பாடிய ரசிகர்கள் தான் தற்போதைய அவரது மோசமான பார்ம் குறித்து கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

சர்வதேச கிரிக்கெட்டில் பல தனிப்பட்ட சாதனைகள் படைத்துள்ள கோலி கடந்த 2 ஆண்டுகளாகச் சதம் அடிக்க முடியாமல் டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து போட்டிகளிலும் தட்டுத் தடுமாறி வருகிறார். 2022ம் ஆண்டில் கோலி இதுவரை 4 டெஸ்ட், 7 ஒருநாள் மற்றும் 4 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். இதன் மூலம் மொத்தம் 459 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார். இதில் நான்கு அரை சதங்களும் அடங்கும். இங்கிலாந்துக்கு எதிரான நடப்புத் தொடரில் முறையே 11,20,1,11,16 ரன்களில் ஆட்டமிழந்து விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளார்.

ஒவ்வொரு போட்டியிலும் அவர் சதம் அடித்து கம்பேக் கொடுப்பார் என்று காத்திருக்கும் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அவருக்கு எதிராக முன்னாள் வீரர்கள் பலரும் குரல் கொடுத்துள்ளனர். குறிப்பாக கபில் தேவின் கருத்து கடும் விமர்சனமாகப் பார்க்கப்பட்டது. அவர், “டி20 போட்டியில் ஆடும் லெவனில் விராட் கோலியை வெளியே அமர வைக்க வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இரண்டாவது இடத்தில் இருக்கும் பந்து வீச்சாளரான அஸ்வினை அணியிலிருந்து நீக்கும் போது, பேட்ஸ்மேனான கோலியையும் நீக்கலாம்.” என்று குறிப்பிட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3 ஒருநாள் மற்றும் 5 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ நேற்று (ஜூலை 14) அறிவித்தது. இதற்கு அவரது மோசமான பார்ம் தான் காரணம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் சமூக வலை தளங்களில் கருத்துகள் வெளியிடப்பட்டு வருகின்றன. அதன்படி விராட் கோலிக்கு ஆதரவாக பாபர் அசாமின் ட்விட்டர் பதிவு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அவர், விராட் கோலியுடன் இருக்கும் புகைப்படத்துடன், ’இதுவும் கடந்து போகும். உறுதியுடன் இருங்கள்’ என்று கோலிக்கு நம்பிக்கை தரும் வகையில் ட்வீட் செய்துள்ளார்.

பாகிஸ்தான் என்றாலே பகைமையுடன் பார்க்க பழக்கப்பட்டுக் கொண்டுள்ள சூழலில், விராட் கோலிக்கு ஆதரவாக அந்நாட்டு கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் அசாமின் ட்வீட் வைரலாகி வருகிறது. தற்போது தடுமாறி வரும் விராட் கோலி, மீண்டும் கிங் கோலியாக கம்பேக் கொடுக்க வேண்டும் என்பதே கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

**கிறிஸ்டோபர் ஜெமா**

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *