’’நான் தானே கேப்டன்..?’’ நடுவரிடம் வாக்குவாதம் செய்த பாபர் அசாம்

Published On:

| By christopher

இலங்கைக்கு எதிரான நேற்றைய (செப்டம்பர் 10) போட்டியில் தான் கேட்காத டிஆர்எஸ் ரிவ்யூவிற்கு நடுவர் அனுமதி அளித்த நிலையில் பாகிஸ்தான் கேப்டன் கொடுத்த ரியாக்சன் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வரும் ஆசிய கோப்பையில் சூப்பர் 4 சுற்றின் கடைசி ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் ஏற்கனவே இறுப்போட்டிக்கு முன்னேறிய இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, 19.1 ஓவர்களில் 121 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

பின்னர் 122 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி, 17.1 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இதனை தொடர்ந்து நாளை நடைபெறும் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் – இலங்கை மோதுகின்றன.

ரிவ்யூ கேட்ட விக்கெட் கீப்பர்!

இந்நிலையில் இந்த இலங்கை அணிக்கு எதிராக பாகிஸ்தான் பந்துவீசிய போது நிகழ்ந்த ஒரு சுவாரசியமான சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நேற்று நடந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் பந்துவீச்சாளர் அசன் அலி 16வது ஓவரை இலங்கை பேட்ஸ்மேன் நிசங்கா எதிர்கொண்டார். அப்போது பேட்டின் விளிம்பை தொட்டது போல் சென்ற ஒரு பந்தை கேட்ச் பிடித்த விக்கெட் கீப்பர் ரிஸ்வான் அவுட் கேட்டார். ஆனால் நடுவர் அவுட் தர மறுக்கவே, அவரே ரிவ்யூம் கேட்டார். உடனே நடுவரும் ரிவ்யூ சிக்னல் கொடுத்தார்.

அதிர்ச்சியில் பாபர் அசாம்!

பொதுவாக டிஆர்எஸ் எனப்படும் ரிவ்யூ கேட்பதற்கு அணியின் கேப்டனுக்கு மட்டுமே உரிமை உள்ளது. இந்நிலையில் ரிஸ்வான் கேட்டதை தொடர்ந்து நடுவர் சிக்னல் கொடுத்ததை கண்ட பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் சற்று அதிர்ச்சியடைந்தார். உடனே, ”நான் தானே கேப்டன்? நான் சொன்னால் தானே ரிவ்யூ எடுக்க முடியும்?” என்று நடுவரிடமும், ரிஸ்வானிடமும் கேட்டார்.

https://twitter.com/cricketfanvideo/status/1568295957133160449?s=20&t=NyZCED3S7h059AL8-3KgxQ

அதனைதொடர்ந்து அவர் சொன்ன பின்னரே ரிவ்யூ எடுக்கப்பட்டது. எனினும் நிசங்காவின் பேட்டிற்கும், பந்திற்கும் பெரிய இடைவெளி இருந்த நிலையில் பாகிஸ்தான் ரிவ்யூவை இழந்தது. தொடர்ந்து சிறப்பாக விளையாடிய நிசங்கா 55 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிப்பெற செய்தார்.

கிறிஸ்டோபர் ஜெமா