ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியிலிருந்து பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாகின் அப்ரிடி காயம் காரணமாக விலகியிருப்பது அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 27-ம் தேதி முதல் செப்டம்பர் 11-ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது.
இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா தலைமையில் களம் காண்கிறது. துணை கேப்டனாக கே.எல்.ராகுல் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்திய அணி சார்பில் நட்சத்திர வீரர்களாக ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜே, அஸ்வின் ஆகியோர் உள்ளனர்.
இந்திய அணி பாகிஸ்தான் அணியை ஆகஸ்ட் 28-ம் தேதி நடைபெறும் போட்டியில் எதிர்கொள்கிறது. இந்தப் போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில், பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷாகின் அப்ரிடி காயம் காரணமாக ஆசிய போட்டியில் இருந்து விலகியுள்ளார்.
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆடியபோது, ஷாகின் அப்ரிடிக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டது.
இதனால் அவர் ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
ஷாகின் அப்ரிடி இந்தியாவின் தொடக்க ஆட்டக்கார்களான, ரோகித் ஷர்மா, விராட் கோலி, கே.எல் ராகுல் போன்றவர்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இதுகுறித்து பாகிஸ்தான் பந்துவீச்சாளர் வக்கர் யூனுஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஷாகின் போட்டியிலிருந்து விலகியது இந்தியப் பந்து வீச்சாளர்களுக்கு பெரிய ஆறுதலாக இருக்கும்.
அவர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்காதது சோகத்தை ஏற்படுத்துகிறது. ஷாகின் விரைந்து நலம் பெற வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
ஷாகின் அப்ரிடி 25 டெஸ்ட் போட்டிகள், 32 ஒரு நாள் போட்டிகள், 40 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார்.
36 சர்வதேசப் போட்டிகளில் விளையாடி, 78 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் 2021-ம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரராக ஷாகின் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
செல்வம்