வளர்ந்து வரும் இளையோருக்கான ஆசிய கோப்பை 2023 தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா ஏ அணியை வீழ்த்தி பாகிஸ்தான் ஏ அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
இலங்கை கொழும்பு பிரேமதேசா மைதானத்தில் இன்று (ஜூலை 23) நடைபெற்ற வளர்ந்து வரும் இளையோருக்கான ஆசிய கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா ஏ மற்றும் பாகிஸ்தான் ஏ அணிகள் மோதின.
இதில், டாஸ் வென்ற இந்தியா ஏ அணியின் கேப்டனான யாஷ் துல் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி பாகிஸ்தான் ஏ அணி முதலில் பேட்டிங் ஆடியது.
அந்த அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 352 ரன்கள் குவித்து, இந்தியா ஏ அணிக்கு கடின இலக்கை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. பாகிஸ்தான் தரப்பில் தயப் தாஹிர் 71 பந்துகளில் 12 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் உள்பட 108 ரன்களுடன் சதமடித்தார்.
இதையடுத்து கடின இலக்கை துரத்தி களமிறங்கிய இந்தியா ஏ அணியில் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
தமிழக வீரர் சாய் சுதர்சன் ஓரளவு நல்ல தொடக்கம் கொடுத்த நிலையில் அவரும் 29 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் இந்தியா ஏ அணி 40 ஓவர்களில் 224 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது.
இதனால் 128 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் ஏ அணி லீக் ஆட்டத்தில் இந்தியாவிடம் கண்ட தோல்விக்கு பழித்தீர்த்ததுடன் தொடர்ந்து 2ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தையும் வென்றுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
நெருங்கும் தேர்தல்… தீவிரமாகும் சதிகள்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை!