இந்தியா-தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று (அக்டோபர் 6) தொடங்கியது.
தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.
இரு அணிகளுக்கிடையே நடைபெற்ற டி20 தொடர் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வீரர்கள் சிறப்பாக விளையாடி 2-1 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றினர்.
ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 16ம் தேதி நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பையில் கலந்துகொள்வதற்காக ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இன்று (அக்டோபர் 6) புறப்பட்டுச் செல்கிறது.
அதேநேரத்தில் தென்னாப்பிரிக்காவுடனா 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்கு ஷிகார் தவான் தலைமையிலான இந்திய அணியும் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது.
அதன்படி, அவருடைய தலைமையிலான இந்திய அணி, இன்று (அக்டோபர் 6) தென்னாப்பிரிக்காவுடன் களம் கண்டது.
இன்று உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோவில் உள்ள அடல் பிஹாரி வாஜ்பாய் மைதானத்தில் இப்போட்டி தொடங்கியது.
மதியம் 1 மணிக்கு டாஸ் போடப்பட்டு போட்டிகள் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், மழை பெய்த காரணத்தால் 2.30 மணிநேரம் கழித்து போட்டிகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.
போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

அதுமட்டுமில்லாமல் 50 ஓவர் கொண்ட ஒரு நாள் போட்டி மழை காரணமாக 40 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
பின்னர் 3.30 மணிக்கு டாஸ் போடப்பட்டு, அதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஷிகார் தவான் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதைத் தொடர்ந்து பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க வீரர்களாக குயின்டன் டி காக் மற்றும் ஜன்னிமன் மாலன் களமிறங்கினர்.
11 ஓவர் இறுதியில் விக்கெட் இழப்பின்றி தென் ஆப்பிரிக்கா அணி 44 ரன்களை எடுத்திருந்த நிலையில், இந்திய அணியின் பந்துவீச்சாளர் ஷர்துல் தாக்கூர் அந்தக் கூட்டணியைப் பிரித்தார்.
13 ஆவது ஓவரில், தென் ஆப்பிரிக்கா பேட்டர் ஜன்னிமன் மாலனின் விக்கெட்டை அவர் கைப்பற்றினார்.

அவர் வெளியேறிய பிறகு கேப்டன் பவுமா களமிறங்கி விளையாடினார். அவரும் வந்த வேகத்தில் பெவிலியன் (8 ரன்களில்) திரும்பினார்.
அதற்குப் பிறகு களமிறங்கிய மில்லர், கிளாசென் ஆகியோர் அணியை தாங்கிப் பிடித்தனர். தற்போது அந்த அணி, 36 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் எடுத்துள்ளது.
மோனிஷா