Shubman Gill: 2023 ஒருநாள் உலகக்கோப்பை, இந்தியாவில் கடந்த அக்டோபர் 5 துவங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
இந்த தொடரில், கடந்த அக்டோபர் 8 அன்று, இந்திய அணி தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், கே.எல்.ராகுல் மற்றும் விராட் கோலியின் சிறப்பான ஆட்டத்தால், இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தியாவின் ஆஸ்தான துவக்க ஆட்டக்காரராக திகழும் சுப்மன் கில், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இந்த போட்டியில் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக, ரோகித் சர்மாவுடன் இஷான் கிஷன் துவக்க ஆட்டக்காரராக களமிறங்கினார்.
அந்த நேரத்தில், பயிற்சி ஆட்டங்களுக்காக திருவனந்தபுரம் சென்றிருந்த இந்திய அணி, அங்கு இருந்து சென்னை வந்ததில் இருந்தே, சுப்மன் கில் காய்ச்சல் காரணமாக அவதிப்பட்டு வந்ததாக, பிசிசிஐ நிர்வாகிகள் தரப்பில் இருந்து தகவல் வெளியாகியிருந்தது.
இதுகுறித்து பேசிய, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டும், சுப்மன் கில் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருப்பதாக தெரிவித்திருந்தார்.
வரும் அக்டோபர் 11 அன்று நடைபெறவுள்ள ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்திலும், சுப்மன் கில் பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியானது.
இந்நிலையில், சுப்மன் கில்லின் உடல்நிலை குறித்து இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், சுப்மன் கில் இன்னும் முழுமையாக காய்ச்சல் பாதிப்பில் இருந்து மீளவில்லை என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
இன்று (அக்டோபர் 9) இந்திய அணியுடன் அவர் டெல்லிக்கு பயணம் செய்யவில்லை என்றும், அதனால் வரும் அக்டோபர் 11 அன்று ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நடைபெறவுள்ள ஆட்டத்தில் அவர் பங்கேற்க மாட்டார் எனவும் கூறியுள்ளது.
அதுமட்டுமின்றி, அவர் சென்னையிலேயே மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இதனால், வரும் அக்டோபர் 14 அன்று அகமதாபாத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெறவுள்ள உலகக்கோப்பை லீக் போட்டியிலும், சுப்மன் கில் விளையாடுவது சந்தேகமாகியுள்ளது.
முரளி
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
ODI Worldcup: ஆதிக்கத்தை தொடரும் நியூசிலாந்து!
இஸ்ரேல் போர் : பாலஸ்தீனத்துக்கு காங்கிரஸ் ஆதரவு!