2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடரில், தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு எதிராக விளையாடி முதல் 3 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்த இலங்கை அணி, வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நெருக்கடியில், தனது 4வது போட்டியில் நெதர்லாந்து அணியை எதிர்கொண்டது.
லக்னோவில் உள்ள ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், முதலில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆனால், அந்த தேர்வு நெதர்லாந்து அணிக்கு சாதகமானதாக அமையவில்லை.
அணியை மீட்ட சைபிராண்ட் – வேன் பீக் இணை
கசுன் ரஞ்சிதாவின் வேகத்தில் வீழ்ந்த நெதர்லாந்து அணியின் டாப் ஆர்டர் அடுத்தடுத்து ஃபெவிலியன் திரும்பியது. விக்ரம்ஜித் சிங், மேக்ஸ் ஓ’டவுட் மற்றும் காலின் அக்கர்மான் ஆகியோர், ரஞ்சிதாவிடம் தங்களது விக்கெட்டை பறிகொடுக்க, நெதர்லாந்து 54 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்தது.
பின் தில்சன் மதுசங்கா தனது பங்கிற்கு நெதர்லாந்து அணியின் மிடில் ஆர்டரை பதம் பார்த்தார். 71 ரன்களுக்கு, நெதர்லாந்து அணி 5 விக்கெட்களை இழந்தது. பின் அந்த அணியின் கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் விக்கெட்டை மஹீஸ் தீக்சனா கைப்பற்ற, நெதர்லாந்து அணி 91 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்தது.
பின் 7வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த சைபிராண்ட் ஏங்கெல்பிரெச்ட் மற்றும் லோகன் வேன் பீக், அந்த விக்கெட்டுக்கு 130 ரன்கள் சேர்த்து நெதர்லாந்து அணியை பாசிட்டிவ் பாதைக்கு திருப்பினர். சைபிராண்ட் ஏங்கெல்பிரெச்ட் 70 ரன்களுக்கும், லோகன் வேன் பீக் 59 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.
பின் 50வது ஓவரில் ஆல்-அவுட் ஆன நெதர்லாந்து, 262 ரன்களை சேர்த்திருந்தது. இலங்கை அணிக்காக, கசுன் ரஞ்சிதா மற்றும் தில்சன் மதுசங்கா தலா 4 விக்கெட்களை வீழ்த்தினர்.
மீண்டும் அசத்திய சதீரா சமரவிக்ரமா..
263 ரன்கள் என்ற இலக்கை நோக்கி குஷல் பெரேரா மற்றும் கேப்டன் குஷல் மெண்டிஸ் சொற்ப ரன்களுக்கு வெளியேறி ஏமாற்றம் அளித்தனர்.
ஆனால், 3வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த பதும் நிசங்கா மற்றும் சதீரா சமரவிக்ரமா அதிரடியாக விளையாடி ரன்களை குவிக்க துவங்கினர். அரைசதம் கடந்த பதும் நிசங்கா 54 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த சரித் அசலங்கா மற்றும் தனஞ்சியா டி சில்வா தங்கள் பங்குக்கு முறையே 44 ரன்கள் மற்றும் 30 ரன்கள் சேர்த்தனர். மறுமுனையில், கடைசி வரை ஆட்டமிழக்காமல் சதீரா சமரவிக்ரமா 91 ரன்கள் குவிக்க, இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மேலும், இதன்மூலம் இந்த உலகக்கோப்பை தொடரில் தனது முதல் வெற்றியையும் இலங்கை பதிவு செய்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
7 பவுண்டரிகளுடன் 107 பந்துகளில் 91 ரன்கள் சேர்த்த சதீரா சமரவிக்ரமா, இந்த போட்டிக்கான ‘ஆட்ட நாயகன்’ விருதை வென்றார்.
முரளி
பிரதமர் தேர்தலில் அணிலாக இருப்போம்: டிடிவி தினகரன் பேட்டி!
அமர் பிரசாத் ரெட்டி கைது – நவம்பர் 3 வரை காவல்!
சென்னையில் பாகிஸ்தான் வீரர்கள்: தோல்வியில் இருந்து மீள்வார்களா?