இந்தியாவில் நடைபெற்றுவரும் 2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 17வது லீக் போட்டியில், இந்தியா மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகள் மோதிக்கொண்டன.
முன்னதாக விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்தியா, 4வது போட்டியிலும் வெற்றி பெறும் முனைப்போடு இன்று களம் கண்டது.
வங்கதேச அணியின் கேப்டன் ஷாகிப் அல் ஹசன் காயம் காரணமாக, இந்த போட்டியில் இருந்து விலகினார். அவருக்கு பதிலாக, நஜிமுல் ஹொசைன் சண்டோ வங்கதேச அணியை வழிநடத்தினார்.
இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற நஜிமுல் ஹொசைன் சண்டோ, பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்தியா எந்த ஒரு மாற்றமும் இன்றி களமிறங்கியது.
முதலில் பேட்டிங் செய்ய வந்த வங்கதேச துவக்க ஆட்டக்காரர்கள் தன்சித் ஹசன் மற்றும் லிட்டன் தாஸ், அந்த அணிக்கு மிகச்சிறப்பான துவக்கம் அளித்தனர்.
இந்த ஜோடி முதல் விக்கெட்டிற்கு 93 ரன்கள் சேர்த்தது.தன்சித் ஹசன் 51 ரன்களும், லிட்டன் தாஸ் 66 ரன்களும் ஆட்டமிழக்க, பின் களமிறங்கியவர்கள் மளமளவென சொற்ப ரன்களுக்கு தங்கள் விக்கெட்களை பறிகொடுத்தனர்.
வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!
இறுதியில், முஷ்ஃபிகுர் ரஹீம் மற்றும் மஹ்முதுல்லா சற்று பொறுப்பாக விளையாடி, முறையே 38 ரன்கள் மற்றும் 46 ரன்கள் சேர்க்க, 50 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி 8 விக்கெட் இழப்பிற்கு 256 ரன்கள் சேர்த்தது.
இந்தியாவுக்காக பும்ரா, சிராஜ் மற்றும் ஜடேஜா தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர்.
257 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா அதிரடியான துவக்கம் அளித்தார். ஆனால், எதிர்பாராத விதமாக அவர் 48 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
மறுமுனையில், அதே அதிரடியை வெளிப்படுத்திய சுப்மன் கில், அரைசதம் கடந்து 53 ரன்களுக்கு வெளியேறினார்.
பின் களமிறங்கிய விராட் கோலி, இன்றைய ஆட்டத்தில் தனது ருத்ர தாண்டவத்தை வெளிப்படுத்தினார்.
பந்துகளை பவுண்டரியாக பறக்கவிட்டு 6 ஃபோர், 4 சிக்ஸ் விளாசிய கோலி, கடைசி வரை ஆட்டமிழக்காமல் 103 ரன்கள் குவித்தார்.
மறுமுனையில், கே.எல்.ராகுல் பொறுப்பாக விளையாடி 34 ரன்கள் சேர்க்க, இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் மீண்டும் ஒரு அபார வெற்றியை பதிவு செய்தது.
தனது அதிரடியான சதத்திற்காக, விராட் கோலி இந்த போட்டிக்கான ‘ஆட்ட நாயகன்’ விருதை வென்றார்.
இந்த ஒருநாள் உலகக்கோப்பை தொடரில், இந்தியா மற்றும் நியூசிலாந்து என 2 அணிகளுமே 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில், புள்ளிப் பட்டியலில் ரன் ரேட் அடிப்படையில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது.
முரளி
வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!
பாலஸ்தீன- இஸ்ரேல் விவகாரம்: மோடி நிலைப்பாட்டில் திடீர் மாற்றம்!
காயம் காரணமாக வெளியேறிய ஹர்திக் பாண்டியா -பந்துவீசிய விராட் கோலி