IND vs ENG: இந்தியாவில் நடைபெற்றுவரும் 2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 29வது லீக் போட்டியில், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிக்கொண்டன. இந்த போட்டியில் 100 ரன்கள் வித்தியாசத்தில், இந்தியா அபார வெற்றி பெற்றது.
இதன்மூலம், புள்ளிப் பட்டியலில் 12 புள்ளிகளுடன் இந்தியா மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. மறுமுனையில், இங்கிலாந்து அணிக்கான அரையிறுதி வாய்ப்பு, இந்த தோல்வியின் மூலம் மேலும் குறைந்துள்ளது.
இந்த போட்டியில், முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இந்த தொடரில் முதல் முறையாக இந்தியா முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. இங்கிலாந்து அணிக்கு, கிறிஸ் வோக்ஸ், டேவிட் வில்லே மற்றும் மார்க் வுட் ஆகியோர் பந்துவீச்சில் அதிரடி துவக்கம் அளித்தனர்.
இதன் காரணமாக, அதிரடி காட்ட துவங்கிய இந்திய அணி, சீரான வேகத்தில் விக்கெட்களை பறிகொடுத்தது.
ஆனால், ரோகித் சர்மா (87 ரன்கள்), சூர்யகுமார் யாதவ் (49 ரன்கள்) மற்றும் கே.எல்.ராகுல் (39 ரன்கள்) ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால், 50 ஓவர்கள் முடிவில் இந்தியா 229 ரன்களை சேர்த்தது. இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக டேவிட் வில்லே 3 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்.
230 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணிக்கு, ஜஸ்பிரீத் பும்ரா மற்றும் முகமது ஷமி ஆரம்பத்திலேயே அதிர்ச்சி அளித்தனர்.
இவர்கள் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய இங்கிலாந்து, 10 ஓவர்களுக்குள்ளேயே 4 விக்கெட்களை இழந்தது.
பின் களமிறங்கிய கேப்டன் ஜோஸ் பட்லர் மற்றும் லயம் லிவிங்ஸ்டன் ஆகியோர் அணியை மீட்க முயற்சித்தபோதும், குல்தீப் யாதவ் சூழலில் சிக்கி வெகு விரைவிலேயே ஃபெவிலியன் திரும்பினர்.
இறுதியில், இங்கிலாந்து அணி 129 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் பறிகொடுத்தது.
இதன்மூலம், 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இந்தியாவுக்காக, முகமது ஷமி 4 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்.
10 பவுண்டரி, 3 சிக்ஸ்களுடன், 101 பந்துகளில் 87 ரன்கள் சேர்த்து, இந்திய அணியின் வெற்றிக்கு மிக முக்கிய பங்காற்றிய ரோகித் சர்மா, இப்போட்டிக்கான ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
முரளி
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஆந்திராவில் ரயில்கள் மோதி விபத்து : 3 பேர் பலி!
அமைச்சர்கள் மீதான வழக்குகள்: உச்ச நீதிமன்றத்தில் பாஜக கேவியட் மனு!
கேரள குண்டுவெடிப்பு : யார் காரணம்?