நூர்மி தடகள போட்டி : தங்கம் வென்று நீரஜ் சோப்ரா அசத்தல்!

Paavo nurmi games 2024 : பாவோ நூர்மி தடகள போட்டியில் 85.97 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

பின்லாந்தின் துர்குவில் பாவோ நூர்மி தடகள போட்டி நேற்று (ஜூன் 18) தொடங்கியது. அதில் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் தங்க மகன் நீரஜ் சோப்ரா பங்கேற்றார்.

முதல் சுற்றில் இருந்தே லீடிங்கில் இருந்த அவர்,  போட்டியின் மூன்றாவது சுற்றில் 85.97 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை வீசி முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றார். எனினும் 2022ஆம் ஆண்டு நடந்த இதே நூர்மி போட்டியில் அவர் வெள்ளி வென்ற 89.30 மீட்டர் தூரத்தை முறியடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அவருக்கு அடுத்தபடியாக பின்லாந்து வீரர்களான டோனி கெரானன் (84.19 மீட்டர்) இரண்டாம் இடத்தையும், ஆலிவர் ஹெலண்டர் (83.96 மீட்டர்) மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.

இரண்டு முறை உலக சாம்பியனான கிரெனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் 82.58 மீட்டர் தூரம் மட்டுமே ஈட்டியை எறிந்து நான்காவது இடத்தைப் பிடித்தார்.

பாவோ நூர்மி தடகள போட்டியை தொடர்ந்து, அடுத்ததாக ஜூலை 7ஆம் தேதி நடைபெறும் பாரிஸ் டயமண்ட் லீக்கிலும், அதனைத் தொடர்ந்து உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் பாரீஸ் ஒலிம்பிக் போட்டியிலும் நீரஜ் சோப்ரா கலந்துக்கொள்ள உள்ளார்.

Image

பாரீஸ் ஒலிம்பிக்கில் நீரஜ்

டோக்கியோ 2020 ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கான முதல் தனிநபர் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா வரலாற்றில் இடம்பிடித்தார். அவர் தொடர்ந்து ஆசிய விளையாட்டு, டைமாண்ட் லீக், காமன்வெல்த் விளையாட்டு என அனைத்தை வகையான போட்டிகளிலும் தங்கப் பதக்கத்தை குறி வைத்து வென்று வருகிறார்.

தற்போது பாவோ நூர்மி கேம்ஸிலும் பதக்கம் வென்றதன் மூலம், மிகச்சிறந்த ஃபார்மில் உள்ள அவர் அடுத்த மாதம் நடைபெற உள்ள பாரீஸ் ஒலிம்பிக்கிலும் ஈட்டியை குறிவைத்து எறிந்து தங்கப்பதக்கத்துடன் இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பார் என எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

முதல்வர் இல்லாமல் இயங்கும் 60 அரசு கல்லூரிகள் : ராமதாஸ் குற்றச்சாட்டு!

“50 சதவீத ஹமாஸ் ஆயுதக்குழுவினரை வீழ்த்திவிட்டோம்” : இஸ்ரேல்

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts