பல வருடங்களாக இணைந்து விளையாடும் நட்சத்திர வீரர்களுக்கு அவ்வப்போது பனிப்போர் நிகழ்வது வழக்கமான ஒன்று.
அந்த வகையில் இந்திய கிரிக்கெட் நட்சத்திரங்களில் முக்கியமான வீரர்களாக கருதப்படும் விராட் கோலி மற்றும் ரோகித் சார்மா இருவருக்கும் இடையில் அணிக்குள் அதிக போட்டிகள் நிலவியதாக செய்திகள் வந்தன.
அதன்படி, இங்கிலாந்தில் நடைபெற்ற 2019 உலகக்கோப்பையின் போது அவர்கள் இருவருக்குமான போட்டி உச்சகட்டத்தை எட்டியதாகவும் அதன் காரணமாகவே 2021இல் விராட் கோலி கேப்டன்ஷிப் பதவியை ராஜினாமா செய்து ரோகித் சர்மா புதிய கேப்டனாக பொறுப்பேற்றதாகவும் கூறப்பட்டது.

இதனிடையே, விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோரிடையே விரிசல் இருந்தது உண்மை தான் என்று அண்மையில் ஃபீல்டிங் பயிற்சியாளர் ஆர். ஸ்ரீதர் தனது சுயசரிதை புத்தகத்தில் தெரிவித்திருந்தது இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ரசிகர்களால் மிஸ்டர் ஐசிசி என்று கொண்டாடப்படும் ஷிகர் தவான் மனிதர்களிடையே சில ஈகோ பிரச்சனைகள் இருப்பது சாதாரணமானது என்று கூறியுள்ளார்.
இது பற்றி Sports Tak யூடியூப் தளத்தில் நேற்று (மார்ச் 27 ) பேசிய ஷிகர் தவான், “சில ஈகோ பிரச்சனைகள் மனிதர்களிடையே இருப்பது சாதாரணமாகும்.
குறிப்பாக இந்தியாவுக்காக கிட்டத்தட்ட 220 நாட்கள் நாங்கள் ஒன்றாக இணைந்து விளையாடுகிறோம்.
அதனால் சில நேரங்களில் சிலருடன் தவறான புரிதல்கள் ஏற்படுவது சகஜமாகும். அது எங்களுக்கும் பொருந்தும்.
இங்கே நான் ரோகித் அல்லது விராட் ஆகியோரை பற்றி பேசவில்லை. பொதுவாக சொல்கிறேன்.
குறிப்பாக பயிற்சியாளர்கள், துணை பயிற்சியாளர்கள் மற்றும் அணி மேனேஜர் உட்பட மொத்தம் 40 பேர் இந்திய அணியில் இருப்போம்.
அப்போது ஒருவர் மீது இன்னொருவருக்கு மகிழ்ச்சியான அபிப்ராயம் ஏற்படவில்லை எனில் சில சண்டைகள் ஏற்படலாம். இது சகஜமானது” என்றார்.
மேலும், “அதே சமயம் அவர்களிடம் புரிதல் ஏற்படும் போது ஒருவருக்கொருவர் மீது இருக்கும் அன்பு ஏன் அதிகமாகக் கூடாது” என்று ஷிகர் தவான் கூறினார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
மகளிர் உரிமை தொகை யார் யாருக்கு? முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!