2024-ஆம் ஆண்டுக்கான நார்வே செஸ் தொடர், கடந்த மே 27 தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆடவர் மற்றும் மகளிர் என 2 பிரிவுகளில் நடைபெறும் இந்த தொடரில், ஒவ்வொரு பிரிவிலும் 6 செஸ் ஜாம்பவான்கள் களமிறங்குகியுள்ளனர்.
இந்த தொடரில் 2 பிரிவுகளிலும் மொத்தம் 10 சுற்றுகளாக ஆட்டங்கள் நடைபெறவுள்ள நிலையில், ஒவ்வொரு போட்டியாளரும் பிற போட்டியாளர்களுடன் 2 முறை மோதவுள்ளனர். இந்த தொடரில், இந்தியாவில் இருந்து ஆடவர் பிரிவில் பிரக்ஞானந்தாவும், மகளிர் பிரிவில் வைஷாலி, கொனேரு ஹம்பி ஆகியோரும் விளையாட தகுதி பெற்றனர்.
இந்த தொடரில் 2 சுற்று ஆட்டங்கள் நிறைவடைந்த நிலையில், 3வது சுற்று ஆட்டம் நேற்று (மே 29) நடைபெற்றது. இந்த சுற்றில் இந்திய வீரர் பிரக்ஞானந்தா உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தின் துவக்கத்திலேயே, கார்ல்சன் சில தவறுகளை மேற்கொள்ள அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட பிரக்ஞானந்தா, அந்த ஆட்டத்தில் கார்ல்சனை வீழ்த்தினார்.
இது, கார்ல்சனுக்கு எதிராக பிரக்ஞானந்தா பெரும் முதல் கிளாசிக்கல் ஆட்ட வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம், இந்த தொடரின் 3வது சுற்று முடிவில் 5.5 புள்ளிகளை பெற்ற பிரக்ஞானந்தா, முதலிடத்திற்கு முன்னேறினார்.
மறுமுனையில், மேக்னஸ் கார்ல்சன் 5வது இடத்திற்கு தள்ளப்பட்டார். மேலும், இந்த தொடரின் நடப்பு சாம்பியனான ஹிகாரு நகமுரா 3வது சுற்று முடிவில் 3வது இடத்தில் உள்ளார்.
அதேபோல, மகளிர் பிரிவில் இந்திய வீராங்கனையும், பிரக்ஞானந்தாவின் சகோதரியுமான வைஷாலி தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறார். இவர் 3வது சுற்று முடிவில் 5.5 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார்.
மற்றொரு இந்திய வீராங்கனையான கொனேரு ஹம்பி 3 புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ளார்.
இந்த தொடரில் இன்னும் 7 சுற்று ஆட்டங்கள் மீதமுள்ள நிலையில், துவக்கத்திலேயே பிரக்ஞானந்தா மற்றும் வைஷாலி ஆகியோர் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
– மகிழ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சட்டென குறைந்த தங்கம் விலை… இன்றைய நிலவரம்!
Share Market : 4ஆவது நாளாக குறைந்த சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள்!