தமிழக வீரர்கள் இல்லாத சென்னை சூப்பர் கிங்ஸ்… ஐபிஎல் தொடரில் இருந்து நீக்கப்படுமா?

சிறப்புக் கட்டுரை விளையாட்டு

சென்னை சூப்பர் கிங்ஸ் தமிழக வீரர்களுக்கு வாய்ப்பளிக்காதது சட்டமன்றம் வரை எதிரொலித்த நிலையில், மற்ற அணிகளில் எந்தளவுக்கு அதே மாநிலத்தைச் சேர்ந்த வீர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது என்பதை இந்த கட்டுரை விளக்குகிறது.

உள்ளூர் வீரர்களுக்கு வாய்ப்பு

கடந்த 2007ஆம் ஆண்டு இந்தியன் கிரிக்கெட் லீக் என்ற 20 ஓவர் தொடர் முதன் முதலாக தொடங்கப்பட்டது. இந்த தொடருக்கு பிசிசிஐ எனப்படும் இந்தியா கிரிக்கெட் கட்டுபாட்டு வாரியம் மற்றும் ஐசிசி ஆகியவை அனுமதி வழங்கவில்லை. இருந்தாலும் டி20 தொடரை நடத்த முற்பட்டது ஐசிஎல். அதில் பிசிசிஐ அனுமதி இல்லாமல் பல வீரர்களும் பங்கு பெற முனைப்பு காட்டினர்.

இதனை தடுக்கும் நோக்கில் அதே ஆண்டில் செப்டம்பர் 13ம் தேதி இந்தியன் பிரீமியர் லீக் என்ற டி20 தொடரை தொடங்குவதாக அறிவித்தது பி.சி.சி.ஐ. அதன் முதல் தொடர் 2008 ஏப்ரல் மாதம் நடத்தப்படும் என்றும், இது உள்ளூர் இந்திய வீரர்கள் தங்களது திறமையை காட்ட சிறப்பான வாய்ப்பாக இருக்கும் என்றும் தெரிவித்தது.

சிஎஸ்கே அணியில் 10 தமிழக வீரர்கள்

அதன்படி 2008ம் ஆண்டு நடைபெற்ற முதல் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மும்பை இந்தியன்ஸ் உள்ளிட்ட 8 அணிகள் பங்கு பெற்றன.

இதில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பத்ரிநாத், பழனி அமர்நாத், ரவிச்சந்திரன் அஸ்வின், லக்‌ஷ்மிபதி பாலாஜி, அபினவ் முகுந்த், பத்ரிநாத், அனிருத் ஸ்ரீகாந்த், அருண் கார்த்திக், நெப்போலியன் ஐன்ஸ்டீன், வித்யூத் சிவராமகிருஷ்ணன் மற்றும் சுரேஷ் குமார் என 10 தமிழக வீரர்கள் இடம்பெற்றனர்.

இது போலவே முதல் ஐபில் தொடரில் விளையாடிய எட்டு அணிகளிலும் பிசிசிஐ அறிவித்தது போலவே சொந்த மாநிலத்தைச் சேர்ந்த வீரர்களுக்கே அந்தந்த அணிகளில் அதிக முன்னுரிமை அளிக்கப்பட்டது.

கிரிக்கெட் போட்டிகளால் மூச்சுவிடும் ரசிகர்களை கொண்ட இந்தியாவில் ஆரம்பத்தில் இருந்தே ஐபிஎல் போட்டிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனால் உலகளவில் தற்போது பணம் கொழிக்கும் தொடராக ஐபிஎல் மாறி உள்ளது. அதனையடுத்து சொந்த மாநிலத்தைச் சேர்ந்த வீரர்களுக்கு அதிக முன்னுரிமை என்பது முற்றிலும் குறைந்து விட்டது.

தமிழர்கள் இல்லாத சிஎஸ்கே

அதன் வெளிப்பாடாகவே நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் முகமாக மகாராஷ்டிராவைச் சேர்ந்த ரோகித் சர்மாவும், குஜராத் டைட்டன்ஸ் அணியின் முகமாக அதே மாநிலத்தைச் சேர்ந்த ஹர்திக் பாண்டியாவும் கேப்டன்களாக இருக்கும் ஐபிஎல் தொடரில், 15 ஆண்டுகள் ஆன பின்னரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மட்டும் தமிழ்நாட்டை சேர்ந்த வீரர்கள் யாரும் இன்றி தொடரை சந்தித்துள்ளது.

இதற்கிடையே நடப்பு ஐபில் தொடருக்காக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஏலம் நடைபெற்றது. அதில் புதிதாக தமிழக வீரர்களை எடுக்க முயற்சிக்காத சிஎஸ்கே அணி, 2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் இடம்பெற்று இருந்த ஜெகதீசன் மற்றும் ஹரி நிசாந்த் ஆகிய இருவரையும் கூட தக்கவைக்க தவறியது.

ஜெகதீசனை தவறவிட்ட சிஎஸ்கே

கோயம்புத்தூரைச் சேர்ந்த வீரரான ஜெகதீசனை மட்டும் ஏலத்தில் எடுக்க முயற்சி செய்தது சென்னை அணி. கொல்கத்தா அணிக்கும், சென்னை அணிக்கும் இடையே ஜெகதீசன் நாராயணனை ஏலத்தில் எடுக்க போட்டி நிலவிய நிலையில், இறுதியில் கொல்கத்தா அணி ஜெகதீசனை 90 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. தனது கையிருப்பில் இன்னும் 1.5 கோடி ரூபாய் மீதம் வைத்திருந்த நிலையில், ஜெகதீசனை ஏலத்தில் எடுக்க 85 லட்சம் ரூபாய் வரை மட்டுமே கேட்டது சென்னை அணி.

இத்தனைக்கும் ஐபிஎல் தொடருக்கு முன்னதாக நடைபெற்ற ரஞ்சி தொடரில் தொடர்ச்சியாக ஐந்து சதங்கள் உட்பட மொத்தம் 6 சதங்கள் அடித்து கிரிக்கெட் உலகின் ஒட்டுமொத்த கவனத்தை ஜெகதீசன் ஈர்த்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து மினி ஏலத்தின் போதே ’தமிழ்நாட்டில் இருந்து இந்திய அணிக்காக விளையாடும் முக்கிய வீரர்களான ரவிச்சந்திரன் அஸ்வின், நடராஜன், தினேஷ் கார்த்திக், விஜய் ஷங்கர் என யாரையுமே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலம் எடுக்க ஏன் முயற்சிக்கவில்லை?’ என கேள்வி எழுப்பினர் சிஎஸ்கே அணியின் ரசிகர்கள்.

ஐபில் அணிகளில் தமிழக வீரர்கள்

அதே நேரத்தில் ஐபிஎல் தொடரில் தமிழகத்தைச் சேர்ந்த 11 வீரர்கள் மற்ற அணியில் இடம்பெற்று முக்கிய தூண்களாக பங்காற்றி வருகின்றனர். குஜராத் டைட்டன்ஸ் அணியில் விஜய் சங்கர், சாய் கிஷோர், சாய் சுதர்ஷன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் ஜெகதீசன் நாராயணன், வருண் சக்ரவர்த்தி மற்றும் தமிழ் பேசும் வெங்கடேஷ் அய்யரும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் முருகன் அஸ்வின், ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

அதே போல சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் தங்கராசு நடராஜன் மற்றும் வாஷிங்டன் சுந்தரும், பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஷாருக் கான், ஆர்சிபி அணியில் தினேஷ் கார்த்திக் ஆகியோரும் உள்ளனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தடை

இந்நிலையில் கடந்த 11ம் தேதி தமிழ்நாடு சட்டசபையில் விளையாட்டுத் துறைக்கான மானிய கோரிக்கை நடைபெற்றது. அப்போது பேசிய பாமக எம்எல்ஏ வெங்கடேஸ்வரன், ”தமிழகத்தில் திறமையான வீரர்கள் இருந்தும் ஒருவரை கூட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தேர்வு செய்யவில்லை. தமிழர்களே இல்லாமல் தமிழக அணி என்பது போல விளம்பரம் செய்து நம் மக்களிடம் லாபம் அடைகின்றனர்.

எனவே தமிழ்நாட்டு வீரர்கள் இடம்பெறாத சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாட தமிழ்நாடு அரசு தடை விதிக்க வேண்டும்.” என கோரிக்கை வைத்தார்.

பாமக எம்.எல்.ஏவின் கோரிக்கை ரசிகர்களிடையே அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியது. அதே நேரத்தில் உள்ளூர் வீரர்களுக்கு வாய்ப்பு என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட ஐபிஎல் தொடரில் சொந்த மாநில வீரர்களை கூட ஏலத்தில் எடுக்க ஆர்வம் காட்டாத சிஎஸ்கே அணி மட்டுமின்றி ஐபிஎல் தொடரை நடத்தும் பிசிசிஐ மீதும் எழுப்பப்பட்ட அதிரடியான தாக்குதல் கேள்வியாகவே தேசிய அளவில் இது பார்க்கப்பட்டது.

வாய்ப்பு வழங்காத அணிகள்

மொத்தமுள்ள 10 அணிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மட்டுமே சொந்த மாநில வீரர்களுக்கு முற்றிலுமாக வாய்ப்பை தர மறுத்துள்ளன.

அதிகபட்சமாக பஞ்சாப் கிங்ஸ் அணியில் சொந்த மாநிலத்தைச் சேர்ந்த 5 வீரர்களுக்கும், மும்பை இந்தியன்ஸ் அணி 4 வீரர்களுக்கும், டெல்லி அணி 3 வீரர்களுக்கும் வாய்ப்பளித்துள்ளது. அதேபோல ஆர்.சி.பி மற்றும் எல்.எஸ்.ஜி அணிகள் சொந்த மாநிலத்தைச் சேர்ந்த தலா 2 வீரர்களுக்கு வாய்ப்பளித்துள்ளது.

குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் ஹதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் அந்த மாநிலத்தைச் சேர்ந்த ஒரு வீரருக்கு வாய்ப்பளித்துள்ளன.

பெஞ்சில் அமரவைக்கப்படும் வீரர்கள்

அப்படியே வாய்ப்பளிக்கப்பட்டாலும் அவர்கள் ஆடும் லெவனில் களமிறக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் சொந்த மாநிலத்தைச் சேர்ந்த அணிகளில் இடம்பெற்றுள்ள 19 வீரர்களில் 8 வீரர்கள் இன்னும் ஒரு ஐபிஎல் போட்டியில் கூட களமிறக்கப்படவில்லை.

கடந்த 2018ம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 20 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்ட என்.ஜெகதீசனுக்கு இரண்டு ஆண்டுகள் கழித்து 2020 ஆம் ஆண்டு தான் சொந்த அணிக்காக தனது முதல் ஐபிஎல் போட்டியில் களமிறங்க வாய்ப்பு கிடைத்தது. ஐந்து ஆண்டுகள் சிஎஸ்கே அணியில் இடம்பெற்றிருந்த அவர், விக்கெட் கீப்பராக தோனி ஏற்கெனவே அணியில் இருந்ததன் காரணமாக மொத்தம் 7 போட்டிகளில் மட்டுமே களமிறக்கப்பட்டு, பெரும்பாலும் வாய்ப்பு வழங்காமல் பென்ச்சில் அமர வைக்கப்பட்டார்.

சொந்த மாநில வீரர்களுக்காக புதிய விதி

இந்நிலையில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று ஐபிஎல் தொடரின் 16வது சீசனுக்கிடையே, உள்ளூர் வீரர்களுக்கான வாய்ப்பு குறித்த கோரிக்கை சரியான நேரத்தில் எழுந்துள்ளது. அதுவும் தமிழ்நாடு சட்டமன்றத்தில் இந்த கோரிக்கை எழுந்துள்ளது பாராட்டத்தக்கது.

ஐபிஎல் விதிப்படி, சென்னைக்கு அணிக்கோ, வேறு எந்த அணிக்கோ அதே மாநிலத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்களை தங்கள் அணிக்கு எடுக்க வேண்டும் என்ற கட்டாயம் ஏதுமில்லை. அதேவேளையில் சென்னை போன்ற அணியில் தமிழ்நாட்டை சேர்ந்த வீரர்களை பெயரளவில் கூட எடுக்காமல் இருப்பது இளம் கிரிக்கெட் வீரர்களிடம் தவறான முன்னுதாரணத்தையும், அவர்களின் உத்வேகத்தையும் பின் வாங்க செய்யும் என்பதில் சந்தேகமில்லை.

எனவே, ஐபிஎல் தொடர் தோற்றுவிக்கும்போது சொன்னது போன்று, உள்ளூர் கிரிக்கெட் வீர்ர்களுக்கு, அதுவும் சொந்த மாநிலத்தைச் சேர்ந்த வீரர்களுக்கு வாய்ப்பளிக்க புதிய விதிகள் இயற்ற பிசிசிஐ முன் வர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

கிறிஸ்டோபர் ஜெமா

ஆருத்ரா மோசடி நபர்களுடன் பாஜக தலைமை: நிர்மல் வழியில் அண்ணாமலை மீது இன்னொரு புகார்!

ஆருத்ரா மோசடி நபர்களுடன் பாஜக தலைமை: நிர்மல் வழியில் அண்ணாமலை மீது இன்னொரு புகார்!

+1
0
+1
4
+1
2
+1
10
+1
3
+1
4
+1
2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *