2022 டி20 உலகக்கோப்பைக்கு பிறகு, இந்திய டி20 அணியில் இருந்து முற்றிலும் ஒதுக்கப்பட்ட கே.எல்.ராகுலுக்கு 2024 டி20 உலகக்கோப்பையில் விளையாட வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இதற்கிடையில், ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடிவந்த கே.எல்.ராகுல், 2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் 10 இன்னிங்ஸ்களில் 452 ரன்களை குவித்திருந்தார். அதை தொடர்ந்து தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் விளையாடிய கே.எல்.ராகுல், 2024 ஜனவரியில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கு பிறகு இந்தியாவுக்காக எந்த ஒரு சர்வதேச போட்டியிலும் விளையாடவில்லை.
இந்நிலையில், 6 மாதங்களுக்கு பிறகு இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாட கே.எல்.ராகுலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த தொடரில், முதல் போட்டியில் 31 ரன்கள் சேர்த்த கே.எல்.ராகுல், 2வது ஆட்டத்தில் டக்-அவுட் ஆனார். இதை தொடர்ந்து, 3வது ஆட்டத்தில் அவருக்கு பதிலாக ரிஷப் பண்ட் அணியில் சேர்க்கப்பட்டார்.
இப்படியான சூழலில், 2025ஆம் ஆண்டு நடைபெறும் சாம்பியன்ஸ் ட்ரோபி தொடரில், இந்திய அணியில் இருந்து கே.எல்.ராகுல் நீக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், 2023 ஒருநாள் உலகக்கோப்பைக்கு பின் காயத்தால் அவதிப்பட்டுவந்த முகமது ஷமி, இந்திய அணிக்காக எந்தவொரு சர்வதேச தொடரில் விளையாடாத நிலையில், 2025 சாம்பியன்ஸ் ட்ரோபி தொடரில் அவர் மீண்டும் அணிக்கு திரும்ப வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் டாப் ஆர்டர் ரோகித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயஸ் அய்யர், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா ஆகியோரை கொண்டு அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுழற் பந்துவீச்சாளர்கள் ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், வேகப்பந்து வீச்சாளர்கள் ஐஸ்பிரிட் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோர் அணியில் இடம்பெறலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– மகிழ்
‘கலைஞர் எனும் தாய்…’ – எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அமைச்சர் எ.வ.வேலுவின் நூல்!
“மகளே என்று பேசினார், பின்னர் கூப்பிட்டார்!” மலையாள சூப்பர்ஸ்டார் மீது திலகன் மகள் குற்றச்சாட்டு!