இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்றுள்ளது. இதையடுத்து, பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சோயிப் அக்தர் இந்திய அணிக்கு வீடியோ வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். No Pakistan representative in Dubai?
அதில், அவர் கூறியிருப்பதாவது, ‘ சிறந்த அணி கோப்பையை வென்றுள்ளது. வாழ்த்துக்கள் இந்தியா. வருண் உள்ளே வந்தார். சிறப்பாக பந்து வீசினார். விராட் கம் பேக் கொடுத்தார். ரோகித் சர்மா அற்புதமாக ஆடினார். தகுதியான அணிக்கு கோப்பை கிடைத்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் சிறப்பான ஒரு இந்திய அணியை கண்டேன். கடந்த ஆண்டு டி20 கோப்பை, இப்போது சாம்பியன்ஸ் டிராபியை வென்று இந்தியா அசத்தியுள்ளது. வெல் டன்’ என்று கூறியுள்ளார்.
மேலும், இறுதிப் போட்டியில் போட்டியை நடத்திய நாடு என்கிற வகையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் பிரநிதிகள் ஒருவர் கூட துபாய் மைதானத்துக்கு வரவில்லை. இதை குறிப்பிட்டு பேசியுள்ள சோயிப் அக்தர், ‘இந்தியா கோப்பையை வென்றுள்ள நிலையில், ஒரு விசித்திரத்தை மைதானத்தில் காண முடிந்தது. போட்டியை நடத்திய நாடு என்கிற வகையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய பிரதிநிதிகள் கோப்பையை இந்தியாவிடம் கொடுத்திருக்க வேண்டும். போட்டியை நாம்தானே நடத்தினோம். ஆனால், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய பிரதிநிதி இல்லாதது என்னை மிகுந்த சோர்வுக்குள்ளாக்கியுள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மோஷின் நக்வி பரிசளிப்பு விழாவில் கலந்து கொள்ளாததைதான் அக்தர் இப்படி மறைமுகமாக சாடியுள்ளார். அதே வேளையில், மோஷின் நக்வி அந்த நாட்டு உள்துறை அமைச்சராக இருப்பதால், தன்னால் பரிசளிப்பு விழாவில் பங்கேற்க முடியாது என்று ஏற்கனவே ஐ.சி.சியிடம் தெரிவித்துள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபி கோப்பை பரிசளிப்பு விழாவில் ஐ.சி.சி தலைவர் ஜெய்ஷா , இந்திய கேப்டன் ரோகித்திடம் கோப்பையை வழங்கினார். பிசிசிஐ முன்னாள் தலைவர் ரோஜர் பின்னி வீரர்களுக்கு பிளேஸர் அணிவித்து வாழ்த்தினார். இவர்கள், தவிர ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஆரோன் ஃபின்ச், பிசிசிஐ செயலாளர் தேவ்ஜித் சைகியா ஆகியோர் பங்கேற்றனர். No Pakistan representative in Dubai?
பாகிஸ்தான் சாம்பியன்ஸ் டிராபி தொடரை அதிகாரப்பூர்வமாக நடத்தினாலும், இந்திய அணி அந்த நாட்டுக்கு சென்று ஆட மறுத்து விட்டது. இதனால், இந்திய அணியின் ஆட்டங்கள் துபாயில் நடந்தன. அட்டவணைப்படி இறுதிப்போட்டி மார்ச் 9 ஆம் தேதி லாகூரில் நடந்திருக்க வேண்டும். ஆனால், இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று விட்டதால், இறுதிப் போட்டியும் துபாயில் நடத்த வேண்டிய நிலை உருவானது.
அதே வேளையில், போடியத்தில் யார் யார் ஏற வேண்டுமென்பதை ஐ.சி.சி.தான் முடிவு செய்கிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய பிரதிநிதி சுமைர் மைதானத்தில் இருந்தும் அவருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும் தகவல்கள் உள்ளன.