இந்திய அணி வீரர் விராட்கோலி சர்வதேச போட்டிகளில் ஒரு சதம் கூட அடிக்க முடியாமல் ஆகஸ்ட் 19ஆம் தேதியுடன் 1000 நாட்களை கடந்துள்ளார்.
ஒவ்வொரு தலைமுறைகளின் இந்திய கிரிக்கெட் அணியின் பெயரை சர்வதேச அளவில் பெருமையுடன் உச்சரிக்க வைக்கும் வகையில் விளையாடும் வீரர்கள் உருவாவது உண்டு.
கபில்தேவ், கவாஸ்கர், சச்சின், கங்குலி, தோனி என்ற அந்த வரிசையில் தன் பெயரை சிறப்பாக விளையாடி பதித்தவர் தான் விராட்கோலி.
உலக அரங்கில் அடுத்தடுத்து பல சாதனைகள் படைத்து நம்பர் 1 வீரராக வலம் வந்தவர் தான் விராட் கோலி.சச்சினுக்கு அடுத்தபடியாக அவரது சாதனையை முறியடிக்க வந்தவர் என்று எதிர்ப்பார்க்கப்பட்டவர்.

சதமின்றி ஆயிரம் நாட்கள்!
ஆனால் இன்றைய நிலவரப்படி ’அப்படி இருந்த கோலியா, இப்போது இப்படி விளையாடுகிறார்’ என்று அனைத்து ரசிகர்களுக்கும் கேள்வி எழுந்துள்ளது.
சர்வதேச போட்டிகளில் ஒரு சதம் கூட அடிக்க முடியாமல் 1000 நாட்களை கடந்துள்ளார்.
3 ஆண்டுகளாக சதமடிக்க முடியாமல் விராட்கோலி திணறி வரும் நிலையில் அவரின் இந்த சோகமான சாதனை குறித்து சமூக வலை தளங்களில் வருத்தத்துடன் பகிர்ந்து வருகின்றனர் ரசிகர்கள்.

கடைசி சதம் எப்போது?
2019ம் ஆண்டு நவம்பர் 23 அன்று கொல்கத்தா ஈடன் கார்டன்ஸில் நடைபெற்ற வங்க தேசத்துக்கு எதிரான டெஸ்டில் 136 ரன்களுடன் கடைசியாக சதம் அடித்தார் கோலி.
அதுதான் அவருடைய 70வது சதம், 27வது டெஸ்ட் சதம். முன்னதாக அதே ஆண்டில் ஆகஸ்டில் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் தொடர்ச்சியாக இருசதம் அடித்தார்.
சர்வதேச டி20 போட்டியில் இதுவரை அவர் ஒரு சதமும் அடித்ததில்லை.

ஐசிசி தரவரிசையில் அதோ கதி!
கடந்த மாதம் 28ம் தேதி ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் கடந்த 6 வருடங்களில் இல்லாத அளவுக்கு முதன்முறையாக டாப் 10 பட்டியலில் இருந்து வெளியேறி 12ம் இடம் பிடித்துள்ளார்.
ஒருநாள் போட்டிகளில் 5வது இடம் பிடித்துள்ளார். டி20 பேட்டிங் தரவரிசையில் கோலி எங்கு இருக்கிறார் என்று தேடும்படியாக 34வது இடத்தில் உள்ளார். இது அவரது மோசமான சாதனையாகும்.
விராட்கோலி சதங்கள் பல அடித்து, சாதனைகள் பல படைப்பார் என்று பலரும் எதிர்பார்த்த காலமெல்லாம் மலையேறி, இப்போது அவர் ஒரு சதம் அடித்தால் கூட போதும் என்ற நிலைக்கு வந்துள்ளனர் அவரது ரசிகர்கள்.

மீண்டு(ம்) வருவார் கிங் கோலி!
அதே வேளையில் தோற்கும் சூழ்நிலைகளிலும் சிறிதும் தளராமல், உறுதியுடன் விளையாடி, இந்திய அணிக்கு பல வெற்றிகளை தேடி தந்தவர் விராட்கோலி.
இன்றும் விராட்கோலி அதே உறுதியுடன் மீண்டும் பழைய பார்முக்கு திரும்பி, கிங் கோலியாக எதிரணிகளை கலங்கடிக்க வேண்டும் என்பதே அவரது கோடான கோடி ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பு.
அதனை நிகழ்த்தும் வலிமையும் ஒரு விளையாட்டு வீரராக விராட் கோலிக்கு உண்டு என்பதால் தனது ரசிகர்களை மீண்டும் மகிழ்ச்சிப்படுத்துவார் என்று நம்பலாம்.
கிறிஸ்டோபர் ஜெமா