ஐபிஏ உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் சார்பில் முதல் தங்கத்தை வென்று நிது கங்காஸ் இன்று (மார்ச் 25) சாதனை படைத்துள்ளார்.
13-வது உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகள் டெல்லியில் நடைபெற்று வருகின்றன. இன்று நடைபெற்ற 48 கிலோ எடை பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை நிது கங்காஸ், மங்கோலிய வீராங்கனை லுட்சிஹன் அட்லெட்செட்கை எதிர்கொண்டார்.
ஆரம்பம் முதலே தனது தாக்குதலை தீவிரப்படுத்திய நிது முதல் சுற்றை மூன்றே நிமிடங்களில் முடிவுக்கு கொண்டு வந்தார். இரண்டாவது சுற்றில் ஆரம்பத்தில் மங்கோலியாவின் லுட்சிஹன் தாக்குதல் மூலம் பதிலடி கொடுக்க, இறுதியில் 3-2 என்ற நிது கங்காஸ் சுற்றை தன்வசப்படுத்தினார்.
அடுத்தடுத்த சுற்றுகளில் ஆட்டம் முடியும் வரை தனது தாக்குதல் ஆட்டத்தையே பின்பற்றிய நிது கங்காஸ் 5-0 புள்ளி கணக்கில் மங்கோலிய வீராங்கனை லுட்சிஹனை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
இதன்மூலம் நடப்பு ஐபிஏ உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் 2023 போட்டியில் இந்தியாவுக்கு தங்கம் வென்ற முதல் வீராங்கனை என்ற பெருமையை நிது கங்காஸ் பெற்றுள்ளார்.
அதேவேளையில் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் வென்ற ஆறாவது இந்தியப் பெண்மணி என்ற பெருமையும் நிது கங்காஸிடம் வந்துள்ளது.
இவரைத் தொடர்ந்து நடப்பு தொடரில் மேலும் மூன்று இந்திய வீராங்கனைகள் தங்கப் பதக்கம் வெல்லும் போட்டியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கிறிஸ்டோபர் ஜெமா
அரசு பள்ளி மாணவர்களுக்காக களமிறங்கும் அஸ்வின்
சாயிஷாவின் குத்தாட்டம்…வெளியானது பத்து தல ’ராவடி’ பாடல்!