Olympic 2024: பாரிஸில் இந்தியாவுக்கு அதிர்ச்சி… நடுவர்கள் ஒருதலைப்பட்சமா?

2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடரில், இந்தியா இதுவரை 3 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது. பாட்மின்டனில் பி.வி.சிந்து, சாத்விக் – சிராக், குத்துச்சண்டையில் நிகத் சரீன் என இந்தியாவின் பதக்க நம்பிக்கைகள் பதக்கத்தை கைப்பற்றாமலே தொடரில் இருந்து வெளியேறிய நிலையில், குத்துச்சண்டை ஆடவர் 71 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவுக்கு நம்பிக்கை அளித்த நிஷாந்த் தேவ் காலிறுதிக்கு முன்னேறினார்.

இந்த காலிறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்றால் பதக்கம் உறுதி என்ற நிலையில், மெக்சிகோவை சேர்ந்த மார்கோ அலோன்சோ வெர்டே அல்வரெஸை நிஷாந்த் தேவ் எதிர்கொண்டார்.

3 சுற்றுகள் கொண்ட இந்த குத்துச்சண்டை ஆட்டத்தில், முதல் சுற்றில் 5-இல் 4 நடுவர்கள் அவருக்கு 10 புள்ளிகள் வழங்க அபார முன்னிலை பெற்றிருந்தார்.

2வது சுற்றில் 2 நடுவர்கள் மட்டுமே நிஷாந்த் தேவிற்கு 10 புள்ளிகள் வழங்கிருந்தபோதும், அந்த சுற்றின் முடிவிலும் அவரே முன்னிலை வகித்துவந்தார்.

இப்படியான சூழலில் நடைபெற்ற 3வது சுற்று ஆட்டத்தில், நிஷாந்த் தேவ் சிறப்பாக செயல்பட்டார். ரசிகர்கள் அனைவரும் அவரே வெற்றி பெறுவார் என எதிர்பார்த்த நிலையில், 5 நடுவர்களும் மெக்சிகோவின் மார்கோ அலோன்சோவுக்கு 10 புள்ளிகள் வழங்கி, நிஷாந்த் தேவிற்கு 9 புள்ளிகள் வழங்க, 4-1 என்ற விகிதத்தில் அலோன்சோ அரையிறுதிக்கு முன்னேறினார்.

நிஷாந்த் தேவ் பதக்க வாய்ப்பை இழந்து 2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் இருந்து வெளியேறிய நிலையில், நடுவர்களின் முடிவு பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. ‘நடுவர்கள் ஒருதலை பட்சமாக செயல்பட்டுள்ளனர்’, ‘நிஷாந்த் தேவின் வெற்றி திருடப்பட்டுள்ளது’, ‘இது வெளிச்சத்தில் நடந்த திருட்டு’ என ரசிகர்கள் நடுவர்களின் முடிவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங், “இங்கு எப்படி புள்ளிகள் வழங்கப்படுகிறது என எனக்குப் புரியவில்லை”, என நிஷாந்த் தேவ் தோல்வி குறித்து பதிவிட்டுள்ளார்.

பிரபல விளையாட்டு வர்ணனையாளர் ஆனந்த் தியாகி, “உங்களால் முடிந்தால் இந்த ஸ்கோர்கார்டைப் புரிந்து கொள்ளுங்கள்”, என காட்டமாக ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து பதிவிட்டுள்ள ஆர்ச்சிட் சந்தக் என்ற ஐபிஎஸ் அதிகாரி, “இத்தகைய மோசடியான வெளிப்படைத் தன்மையற்ற ஒரு விளையாட்டு ஒலிம்பிக்கில் இடம்பெற்றிருப்பதும், செஸ் ஒலிம்பிக்கில் இடம்பெறாமல் இருப்பதும் விளையாட்டின் கேலிக்கூத்து. நம்ப முடியவில்லை. நிஷாந்த் தேவ்விற்காக வருந்துகிறேன்”, என ட்வீட் செய்துள்ளார்.

இதேபோல பல விளையாட்டு ரசிகர்கள், ‘நிஷாந்த் தேவ் தான் வெற்றியாளர் என்பது தெளிவாக தெரிவிக்கிறது’, ‘நிஷாந்த் தேவின் வெற்றி திருடப்பட்டுள்ளது’, என நடுவர்களின் முடிவை கடுமையாக விமர்சித்து பதிவிட்டு வருகின்றனர்.

– மகிழ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஆறாவது நாளாகத் தொடரும் மீட்புப்பணி… மீளும் வயநாடு

திருப்பத்தூர்: திடீரென சரிந்த ராட்டினம்… அந்தரத்தில் அலறிய மக்கள்… திக் திக் நிமிடங்கள்!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts