ரூ.832 கோடி வேண்டாம்… தாய்க்கழகம் திரும்பும் நெய்மர்

Published On:

| By Kumaresan M

Neymar

பிரேசில் கால்பந்து வீரர் நெய்மர் சவுதி அரேபியாவில் அல் ஹிலால் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். கிட்டத்தட்ட 90 மில்லியன் யு.எஸ். டாலர்களுக்கு (ரூ. 832 கோடி )ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த நிலையில், அந்த அணிக்காக 7 ஆட்டங்களிலும் சவுதி லீக்கில் ஆடியிருந்தார்.

இந்த நிலையில், திடீரென்று அல் ஹிலால் அணியில் இருந்து விலகுவதாக நெய்மர் அறிவித்துள்ளார். நெய்மர் தனது கால்பந்து வாழ்க்கையை தொடங்கிய பிரேசிலின் சான்டோஸ் அணியில் இணையவுள்ளார். இந்த அணிக்காகத்தான் பிரபல கால்பந்து ஜாம்பவான் பீலேவும் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் அணியில் இருந்துதான் நெய்மர் சவுதி அணிக்கு மாறியிருந்தார். முன்னதாக பார்சிலோனா அணிக்காக அவர் விளையாடினார். அப்போது, பார்சிலோனா அணியில் மெஸ்ஸி மற்றும் உருகுவே வீரர் லூயீஸ் சவுரஸ் ஆகியோரும் நெய்மருடன் இணைந்து விளையாடினார்கள். இவர்களை , எம்.எஸ் .என். என்று செல்லப் பெயர் கொண்டு அழைப்பார்கள். பின்னர், 2017 ஆம் ஆண்டு 222 மில்லியன் யூரோவுக்கு பி.எஸ்.ஜிக்கு நெய்மர் மாறினார்.

சவுதி அணியில் இருந்து விலகுவது குறித்து நெய்மர் கூறியதாவது, ‘எனக்கும் எனது குடும்பத்தாருக்கும் புதிய வாழ்க்கை கொடுத்த சவுதி அரேபியாவுக்கு நன்றி. உண்மையான சவுதி அரேபியாவை இங்கு வசித்த காலக்கட்டத்தில் அறிந்து கொண்டேன். வாழ்க்கை முழுமைக்குமான நண்பர்கள் இங்கு கிடைத்தனர். 2034 உலகக் கோப்பை தொடரை சிறப்பாக நடத்தவும் சவுதிக்கு எனது வாழ்த்துக்கள். எந்த சமயத்திலும் உங்களுக்கு உதவியாக இருப்பேன்’ என்று தெரிவித்துள்ளார்.

தற்போது, 32 வயதான நெய்மர் காயம் காரணமாக அவதிப்பட்டு வருகிறார். கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அல் ஹிலால் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். ஆனாலும், காயம் காரணமாக 7 ஆட்டங்களில் மட்டுமே விளையாட முடிந்தது. எனவே, விரைவில் ஓய்வு அறிவித்தாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel