டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது அல்லது தோற்பது என்பது அரிதிலும் அரிதான விஷயமாக பார்க்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் தோல்வியின் விளிம்பில் நின்ற நியூசிலாந்து அணி, யாரும் எதிர்பாராத வகையில் 2வது இன்னிங்ஸில் திடீர் எழுச்சி பெற்று 1 ரன்னில் வெற்றியை பதிவு செய்து கிரிக்கெட் வரலாற்றில் தடம் பதித்துள்ளது.
நியூசிலாந்து மண்ணில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
ஏற்கனவே மவுண்ட் மாங்க்னுயில் நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் 267 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது இங்கிலாந்து அணி.
ஆண்டர்சன் – பிராட் தாக்குதல்
இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி வெல்லிங்டனில் உள்ள பேசின் ரிசர்வ் மைதானத்தில் கடந்த 24-ம் தேதி தொடங்கியது.
டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் டிம் செளதி முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்பிற்கு 435 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
அதிகபட்சமாக இங்கிலாந்து அணியின் ஹேரி ப்ரூக் 186 ரன்களும், ஜோ ரூட் ஆட்டமிழக்காமல் 153 ரன்களும் எடுத்தனர். நியூசிலாந்து அணி தரப்பில் மேட் ஹென்றி அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனைத்தொடர்ந்து முதல் இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து அணியில் 73 ரன்கள் குவித்த கேப்டன் டிம் செளதியை தவிர மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்ததால் 209 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இங்கிலாந்து அணி தரப்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன் – ஸ்டூவர்ட் பிராட் வேகக்கூட்டணி 7 விக்கெட்டுகளை சாய்த்தது.
எதிர்பார்க்காத எழுச்சி
226 ரன்கள் பின் தங்கியநிலையில் பாலோ ஆனில் மீண்டும் தனது 2-வது இன்னிங்சை தொடங்கியது நியூசிலாந்து அணி.
முதல் இன்னிங்ஸில் மரண அடி வாங்கிய நியூசிலாந்து அணி 2வது இன்னிங்ஸில் அதற்கு முற்றிலும் மாறாக, யாரும் எதிர்பாராத வகையில் மாபெரும் எழுச்சியுடன் விளையாடியது.
பேட்டிங்கில் களமிறங்கிய டாம் லதாம் – கான்வே ஜோடி முதல் விக்கெட்டுக்கு 149 ரன்கள் குவித்தனர். அதனைத்தொடர்ந்து ஆடிய கேன் வில்லியம்சன் அதிகபட்சமாக 132 ரன்கள் குவித்தார்.
இந்த சதத்தின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 7,787 ரன்களை குவித்த வில்லியம்சன் அதிக ரன்களை குவித்த நியூசிலாந்து வீரர் என்ற சாதனையை படைத்தார்.
இதனால் அணியின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. முதல் இன்னிங்ஸில் 4 பவுலர்களை மட்டுமே பயன்படுத்திய இங்கிலாந்து அணி, 2வது இன்னிங்ஸில் 7 வீரர்களை பயன்படுத்திய போதும் நியூசிலாந்தை கட்டுப்படுத்த முடியவில்லை.
வில்லியம்சனுக்கு உறுதுணையாக கடைசி கட்டத்தில் விக்கெட் கீப்பர் டாம் பிளெண்டெலும் தன் பங்கிற்கு 90 ரன்கள் குவித்து ஆட்டமிழக்க, நியூசிலாந்து அணி 483 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இங்கிலாந்து அணி மீது விழுந்த இடி
இதையடுத்து 257 ரன்கள் எடுத்தால் வெற்றி இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. ஆனால் பேட்டிங்கைப் போலவே பவுலிங்கிலும் 2வது இன்னிங்ஸில் தனது ஆதிக்கத்தைத் தொடர்ந்தது நியூசிலாந்து அணி.
டெஸ்ட் கிரிக்கெட்டில் எதிர்பாராத இந்த தாக்குதலை சமாளிக்க முடியாமல் ஆரம்பம் முதலே திணறியது இங்கிலாந்து அணி.
தொடக்க வீரர்கள் ஜாக் கிராலே (24), பென் டக்கெட் (33) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த வீரர்களில் 95 ரன்கள் குவித்த அனுபவ வீரர் ஜோ ரூட் தவிர வேறு எந்த வீரரும் 35 ரன்களை தாண்டவில்லை.
இதனால் 256 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இங்கிலாந்து அணி 1 ரன்னில் தோல்வியை தழுவியது.
4 பந்துவீச்சாளர்களை மட்டுமே பயன்படுத்திய நியூசிலாந்து அணி தரப்பில் நீல் வாக்னர் 4 விக்கெட்டும், கேப்டன் டிம் சௌதி 3 விக்கெட்டும், மேட் ஹென்றி 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
1 ரன்னில் த்ரில் வெற்றி
முதல் இன்னிங்ஸில் தோல்வியின் விளிம்பில் இருந்து மீண்டு, 2வது இன்னிங்ஸில் பெரும் எழுச்சி பெற்ற நியூசிலாந்து அணி 1 ரன்னில் த்ரில் வெற்றி பெற்ற சம்பவம் கிரிக்கெட் வரலாற்றில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
பொதுவாக ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி என்பதை அடிக்கடி கிரிக்கெட் ரசிகர்களாக நாம் பார்த்திருக்க முடியும். ஆனால், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது அல்லது தோற்பது என்பது அரிதிலும் அரிதான விஷயமாக பார்க்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அந்த அரிய சாதனையைத் தான் தங்களது சொந்த மண்ணில் நிகழ்த்தி சாதனை படைத்துள்ளது நியூசிலாந்து அணி.
இந்த வெற்றி 146 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 1 ரன்னில் வெற்றி பெற்ற 2-வது அணி என்ற அரிய சாதனையை நியூசிலாந்து அணி நிகழ்த்தியுள்ளது.
இதற்கு முன்னதாக கடந்த 1993-ம் ஆண்டு அடிலெய்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 1 ரன்னில் வெற்றி பெற்று சாதனை படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பாலோ ஆனுக்கு பிறகு வெற்றி
மேலும் முதல் இன்னிங்ஸில் பாலோ-ஆன் பெற்ற ஒரு அணி 2வது இன்னிங்ஸில் தங்களது மிரட்டலான ஆட்டத்தால் வெற்றி பெறுவதும் கடினமாக பார்க்கப்படுகிறது.
அந்த சாதனையையும் அசால்ட்டாக செய்த 4-வது அணியாக டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இடம்பிடித்துள்ளது நியூசிலாந்து அணி.
இறுதியாக 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றிகள் பெற்ற நிலையில் கோப்பையை இரு அணி கேப்டன்களும் பகிர்ந்துகொண்டனர்.
கிறிஸ்டோபர் ஜெமா
உயிரை பறித்த செல்போன்… ரயில் மோதி பலியான மாணவி!
யுவன் 26 – திருப்தியைத் தேடும் இசைப் பயணம்!