இந்தியாவின் அதிர்ச்சி தோல்விக்கு காரணமான ஒரு ஓவர்!

விளையாட்டு

நியூசிலாந்து அணியுடனான ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் வென்ற இந்தியா, டி20 தொடரின் முதல் போட்டிக்காக தோனியின் சொந்த ஊரான ராஞ்சிக்கு இன்று வந்தது.

வழக்கம்போல் ரோகித், விராட் கோலி, ஷமி, போன்ற மூத்த வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டு ராகுல் திரிபாதி, வாஷிங்டன் சுந்தர், ஷிவம் மாவி ஆகியோர் என முற்றிலும் இளம் வீரர்களை கொண்ட அணியுடன் களமிறங்கியது இந்தியா.

டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

4 ஓவர்களில் 40 ரன்கள்

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியில், முதல் ஓவரிலேயே 2 பவுண்டரிகளை அடித்து ஆட்டத்தை அதிரடியாக துவக்கினார் ஃபின் ஆலன்.

முதல் 4 ஓவரிலேயே நியூசிலாந்து அணி 40 ரன்கள் குவிக்க வேகப்பந்துவீச்சினை நிறுத்தி சுழற்பந்துவீச்சுக்கு மாற்றினார் ஹர்திக் பாண்டியா.

இதற்கு நல்ல பலனாக வாஷிங்டன் சுந்தர் தான் போட்ட முதல் ஓவரிலேயே அதிரடி காட்டி வந்த ஃபின் ஆலன்(35) மற்றும் சேப்மன்(0) விக்கெட்டை வீழ்த்தினார்.

கான்வே – பிலிப்ஸ் ஜோடி அபாரம்

இதனையடுத்து கான்வே – பிலிப்ஸ் கூட்டணி அணியை சரிவிலிருந்து மீட்கும் முயற்சியில் இறங்கினர்.

3 விக்கெட்டுக்கு 60 ரன்கள் சேர்த்த நிலையில், பிலிப்ஸ் 17 ரன்களில் இருந்தபோது குல்தீப் யாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

ஆரம்பத்தில் இருந்து நிதானமாக ஆடி வந்த கான்வே (52) அரைசதம் கண்ட நிலையில் அவுட்டானார்.

அவரைத் தொடர்து பிரஸ்வெல்(1), மிட்செல் சாண்ட்னர்(7)ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, 19 ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி 149 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது. அப்போது வரை இந்தியாவின் கையே ஓங்கி இருந்தது.

அர்ஸ்தீப் சிங் – கடைசி ஓவர்

எனினும் நோ பாலுடன் தொடங்கிய அர்ஸ்தீப் சிங்கின் கடைசி ஓவரில் மட்டும் 3 சிக்ஸர்களுடன் 27 ரன்கள் அடித்து சரவெடியாய் வெடித்த டேரில் மிட்செல் அரைசதம் கடந்தார்.

இதனால் 20 ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் குவித்தது.

அடுத்தடுத்து வீழ்ந்த தொடக்க வீரர்கள்

அதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியில் ஆரம்பமே அதிர்ச்சியாக இஷான் கிஷன்(4), ராகுல் திரிபாதி(0), சுப்மன் கில்(7) ஆகியோர் வந்த வேகத்தில் விக்கெட்டை பறிகொடுத்தனர்.

அவர்களை தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் – ஹர்திக் பாண்டியா அணியை சரிவில் இருந்து மீட்கும் முயற்சியில் இறங்கினர்.

அணியின் ஸ்கோர் 12 ஓவர்களில் 80 ரன்களை கடந்த நிலையில் அரைசதம் அடிப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்ட சூர்யகுமார் யாதவ் 47 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அவரைத் தொடர்ந்து பாண்டியாவும் 21 ரன்களில் பந்து வீசிய பிரேஸ்வெல்லிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

போராடிய வாஷிங்டன் சுந்தர்

இறுதியில் சில விக்கெட் கண்டங்களில் இருந்து தப்பிய வாஷிங்டன் சுந்தர் கடைசி வரை போராடினாலும் அவருக்கு துணையாக எந்த வீரரும் களத்தில் நிற்கவில்லை.

இதனால் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுக்கு 155 ரன்கள் குவித்த இந்திய அணி, 21 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியிடம் தோல்வி கண்டது.

இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக வாஷிங்டன் சுந்தர் 50 ரன்கள் குவித்தார்.

இந்தியாவின் இந்த அதிர்ச்சி தோல்விக்கு அர்ஸ்தீப் சிங் கடைசி ஓவரில் கொடுத்த 27 ரன்களே முக்கிய காரணமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி முன்னிலை வகிக்கிறது.

கிறிஸ்டோபர் ஜெமா

வங்கி ஊழியர்கள் 2 நாள் போராட்டம் ஒத்திவைப்பு!

சரியும் பங்கு மதிப்பு : மிரட்டும் அதானி… சவால் விடுத்துள்ள ஹிண்டன்பர்க்

+1
0
+1
0
+1
0
+1
4
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *