தற்போது, வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி கடந்த நவம்பர் 28 அன்று சில்ஹெட் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் துவங்கியது.
இந்த போட்டியில், முதலில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
பின் வங்கதேச அணிக்காக களமிறங்கிய மஹ்முதுல் ஹசன் ஜாய் 88 ரன்கள், கேப்டன் ஷன்டோ 37 ரன்கள், மொமினுல் 37 ரன்கள் சேர்க்க, அந்த அணி முதல் இன்னிங்ஸில் 310 ரன்கள் சேர்த்தது. நியூசிலாந்து அணிக்காக கிளென் பிலிப்ஸ் 4 விக்கெட்களை கைப்பற்றினார்.
இதை தொடர்ந்து, தனது முதல் இன்னிங்ஸை விளையாட களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு, கேன் வில்லியம்சன் சதம் விளாசி அசத்தினார் (104 ரன்கள்). அவருடன் டெரில் மிட்சல் 41 ரன்களும், கிளென் பிலிப்ஸ் 42 ரன்களும் சேர்க்க, நியூசிலாந்து அணியும் முதல் இன்னிங்ஸில் 317 ரன்கள் குவித்தது. வங்கதேசத்திற்காக டைஜூல் இஸ்லாம் 4 விக்கெட்களையும், மொமினுல் 3 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
7 ரன்கள் பின்தங்கிய நிலையில் களமிறங்கிய வங்கதேச அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் ஏமாற்றம் அளித்தாலும், கேப்டன் ஷன்டோ சதம் கடந்து புத்துணர்ச்சி அளித்தார். அவர் 107 ரன்கள் குவித்து ஆட்டமிழக்க, அடுத்து வந்த முஸ்ஃபிகூர் ரஹீம் (67 ரன்கள்) மற்றும் மெஹ்தி ஹசன் மிராஸ் (50 ரன்கள்) அரைசதம் கடந்து அசத்தினர். இதன் காரணமாக, 2வது இன்னிங்ஸில் வங்கதேச அணி 338 ரன்கள் குவித்தது.
இதை தொடர்ந்து, 332 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்துக்கு, டைஜூல் இஸ்லாம் கடும் நெருக்கடி கொடுத்தார். அவரின் சுழலை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்களை இழக்க, நியூசிலாந்து அணி 181 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
இதன் மூலம், வங்கதேச அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பதிவு செய்தது. நியூஸிலாந்துக்காக டெரில் மிட்சல் மட்டும் 58 ரன்களை சேர்த்திருந்தார். டைஜூல் இஸ்லாம் 6 விக்கெட்களை வீழ்த்தினார். மேலும் , 2 இன்னிங்ஸ்களில் 10 விக்கெட்களை வீழ்த்திய இவர், ‘ஆட்ட நாயகன்’ விருதையும் வென்றார்.
இந்த வெற்றியின் மூலம், சொந்த மண்ணில் முதல் முறையாக நியூசிலாந்து அணியை ஒரு டெஸ்ட் போட்டியில் வீழ்த்தி, வங்கதேசம் வரலாறு படைத்துள்ளது.
மேலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-25 புள்ளிப் பட்டியலும், 100% புள்ளி சதவீதத்துடன் 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. அதேபோல, விளையாடிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று 100% புள்ளி சதவீதம் கொண்ட பாகிஸ்தான், இப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இந்தியா (66.67%) 3வது இடத்தில் உள்ளது. மேலும் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா (30%) 4வது இடத்தில் உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
முரளி