ரோகித் சர்மா அரை சதம்… வெற்றியை நோக்கி இந்தியா

Published On:

| By Kumaresan M

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டம் இன்று (மார்ச் 9) மதியம் துபாயில் தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணி தொடர்ந்து, 15வது முறையாக இன்றும் டாஸில் தோற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டியில் 68 சதவிகிதம் இந்தியா வெற்றி பெற வாய்ப்புள்ளதாக ரசிகர்கள் கணித்துள்ளனர். இந்த போட்டியை முன்னிட்டு 5 ஆயிரம் கோடி மதிப்புக்கு பெட்டிங் நடந்து கொண்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியில் தொடக்க வீரர்களாக வில் யங்குடன் சேர்ந்து ரச்சின் ரவீந்தரா களம் இறங்கினார். முகமது ஷமி இந்திய பந்து வீச்சை தொடங்கினார்.newzealand sets 252 runs target

முதல் 5 ஓவர்களில் நியூசிலாந்து அணி சிறப்பாகவே விளையாடியது. வில் யங் 15 ரன்கள் எடுத்த போது வருண் சக்கரவர்த்தி பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட் ஆனார். அடுத்து கனே வில்லியம்சன் ரச்சின் ரவீந்தராவுடன் ஜோடி சேர்ந்தார். இந்த சமயத்தில் 37 ரன்கள் எடுத்திருந்த ரச்சின் ரவீந்திராவும் குல்தீப் பந்தில் போல்டானார்.

அடுத்து கனே வில்லியம்சன் 11 பந்துகளில் குல்தீப் யாதவ் பந்து வீச்சில் அவரிடமே பிடி கொடுத்து அவுட் ஆனார். அப்போது, நியூசிலந்து அணி 3 விக்கெட்டுகளை இழந்து 75 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து, டேரில் மிட்செல், டாம் லதாம் இணைந்தனர். நியூசிலாந்து அணி 108 ரன்களை எடுத்திருந்த போது, டாம் லாதம் 14 ரன்களில் அவுட் ஆனார்.

அடுத்து, மிட்செல்லுடன் கிளென் பிலிப்ஸ் இணைந்தார். இந்த ஜோடி ஓரளவுக்கு இந்திய அணியின் பந்துவீச்சை சமாளித்து ரன்கள் சேகரித்தது. எனினும், நிலைத்து நின்று ஆட முடியவில்லை. 34 ரன்கள் எடுத்த நிலையில் பிலிப்ஸ், வருண் சக்கரவர்த்தி பந்து வீச்சில் அவுட் ஆனார். எனினும், டேரில் மிட்செல் மட்டும் நியூசிலாந்து அணிக்கு நம்பிக்கை கொடுக்கும் விதத்தில் ரன்களை சேகரித்தார்.

அரை சதத்தை கடந்த பிறகு அவர் மட்டையை சுழற்ற நியூசிலாந்து அணி 200 ரன்களை கடந்தது.

மிட்செல்லும் 63 ரன்களில் அவுட்டாகி விட அந்த அணி 250 ரன்களை எட்டுமா என்கிற சந்தேகம் எழுந்தது. கடைசிக்கட்டத்தில் பிரஸ்வெல் ஆட்டம் நியூசிலாந்து அணிக்கு கை கொடுத்தது. இவர், 40 பந்துகளில் 53 ரன்களை எடுத்தார். இதனால், நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 251 ரன்களை எடுத்தது. நியூசிலாந்து அணி இந்த ஆட்டத்தில் 81 பந்துகளில் ஒரு பவுண்டரி கூட அடிக்க முடியவில்லை.. கிளென் பிலிப்ஸ் அடித்த சிக்ஸர்தான் 81 பந்துகளுக்கு பிறகு, பந்து எல்லைக் கோட்டை தாண்டியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணி தரப்பில் வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகளும், ஜடேஜா மற்றும் ஷமி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

தேவையான நேரத்தில் இந்திய ஸ்பின்னர்களின் அபார பந்து வீச்சு காரணமாக நியூசிலாந்து அணியால் பெரிய இலக்கை நிர்ணயம் செய்ய முடியவில்லை என்பதே உண்மை.

தொடர்ந்து, 252 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்திய அணி பேட்டிங்கை தொடங்கியது. ரோகித்துடன் இணைந்து சுப்மன் கில் களம் இறங்கினார். ஜேமிசன் வீசிய முதல் ஓவரின் இரண்டாவது பந்திலேயே ரோகித் சிக்ஸர் அடித்து ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்தார். ரோகித் சர்மா அதிரடியாக விளையாட சுப்மன் கில் நிதானத்தை கடைபிடித்தார்.

இதனால், இந்திய அணி 7 ஓவர்களிலேயே 50 ரன்களை கடந்தது. 10 ஓவர்களில் இந்திய அணி 64 ரன்களை எடுத்திருந்தது. ரோகித் சர்மா 41 பந்துகளில் அரை சதம் அடித்தார். இதில், 5 பவுண்டரிகளும் 3 சிக்ஸர்களும் அடங்கும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share