உலகக்கோப்பை தொடரில் இன்று (அக்டோபர் 22) நடைபெற்ற சூப்பர் 12 சுற்றின் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை 89 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வீழ்த்தியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் டி20 உலகக்கோப்பைத் தொடரில் முதல் சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் சூப்பர் 12 சுற்று தொடங்கியுள்ளது.
அதன்படி சிட்னி மைதானத்தில் நடைபெற்ற சூப்பர் 12 சுற்றின் இன்றைய முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் மோதின.
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

ஆலனின் அதிரடி ஆட்டம்!
அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியில் தொடக்க வீரர்களாக டேவான் கான்வே, பின் ஆலன் களமிறங்கினர். ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் போட்ட முதல் ஓவரிலேயே 4, 6, 4 என்று ஆட்டத்தை அதிரடியாக தொடங்கி வைத்தார் ஆலன்.
அதன்பின்னர் சற்றும் குறையாமல் இருவரும் ஆஸ்திரேலிய பந்துவீச்சை அடித்து நொறுக்கினர். இதனால் முதல் விக்கெட்டுக்கு இருவரும் 56 ரன்கள் குவித்த நிலையில் 6 பந்துகளில் 42 ரன்கள் அடித்த ஆலன், ஹேசில்வுட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
வேகத்தை குறைக்காத கான்வே!
அதனை தொடர்ந்து வந்த கேப்டன் கேன் வில்லியம்சன் பொறுமையை பெருமையாக கருதி ஆட, மறுமுனையில் அதிரடி ஆட்டத்தில் கியரை கொஞ்சமும் குறைக்காத கான்வே சிக்ஸ் அடித்து அரை சதம் கண்டார்.

அதே ஓவரில் சம்பாவின் சுழலில் வில்லியம்சன் 23 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கிளென் பிலிப்ஸ் 13 ரன்களில் ஆட்டமிழந்தார்.
ஒருபுறம் விக்கெட்டுகள் விழுந்தாலும், அதிரடியை தொடர்ந்த கான்வேயுடன், கடைசி நேரத்தில் வந்த நீசம் தன் பங்கிற்கு 2 சிக்ஸர்களை பறக்கவிட்டார்.
இதனால் 20 ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் குவித்தது. கான்வே 92 ரன்களுடன், ஜிம்மி நீஷம் 26 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
அதிகபட்ச ரன்னே 28 தான்!
இதனை தொடர்ந்து 201 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட அந்த அணியின் மூத்த வீரர் வார்னர் 5 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
அவரை தொடர்ந்து கேப்டன் பின்ச் 13 ரன்களிலும், மிட்செல் மார்ஷ் 16 ரன்களிலும் அடுத்தடுத்து வெளியேறினர்.
இதனால் அணியை சரிவில் இருந்து மீட்கும் முயற்சியில் அதிரடி ஆட்டக்காரர் மேக்ஸ்வெல் ஈடுபட்டார். ஆனால் அவருக்கு துணையாக எந்த வீரரும் களத்தில் நிற்கவில்லை.

ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக மேக்ஸ்வெல் மட்டுமே 28 ரன்கள் குவித்து ஆட்டமிழந்த நிலையில், மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து அணியின் தோல்வியை உறுதி செய்தனர்.
17.1 ஓவர்களில் ஆஸ்திரேலியாவின் 10 விக்கெட்டுகளையும் 111 ரன்களுக்குள் சுருட்டிய நியூசிலாந்து அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.

சாதனை படைத்த நியூசிலாந்து!
சொந்த மண்ணில் ரசிகர்களின் பெரும் ஆதரவுடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி இந்த தோல்வியின் மூலம் தனது கிரிக்கெட் வரலாற்றில் குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்துள்ளது.
மேலும் 2009ம் ஆண்டுக்கு பிறகு ஒயிட் பால் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் முதன்முறையாக வீழ்த்தி நியூசிலாந்து அணி சாதனை படைத்துள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
45 நாள் பிரதமர்: ஆண்டுக்கு 1 கோடி அலவன்ஸ்?: கடுப்பில் பிரிட்டன் மக்கள்!
அசீம், அசல் கோலார் செய்யும் சேட்டை: தப்பை தட்டி கேட்பாரா கமல்?