டி20 உலகக்கோப்பை தொடருக்கான கேன் வில்லியம்சன் தலைமையிலான 15 பேர் கொண்ட நியூசிலாந்து அணி இன்று (செப்டம்பர் 20) அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடர் ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்றது. அதில் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து – ஆஸ்திரேலிய அணிகள் மோதின.
172 ரன் என்ற வலுவான இலக்கை நியூசிலாந்து எடுத்திருந்தாலும் ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்தது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான உலகக்கோப்பை அணியை நியூசிலாந்து அறிவித்துள்ளது.
கேன் வில்லியம்சன் தலைமையில், டிம் சவுத்தி , இஷ் சோதி, மிட்செல் சான்ட்னர், க்ளென் பிலிப்ஸ், ஜிம்மி நீஷம், டேரில் மிட்செல், ஆடம் மில்னே, மார்ட்டின் கப்டில், லாச்லன் பெர்குசன், டெவோன் கான்வே, மார்க் சாப்மேன், மைக்கேல் பிரேஸ்வெல், டிரென்ட் போல்ட், பின் ஆலன் ஆகிய 15 பேர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
காயம் காரணமாக சிறிது காலம் போட்டியில் இருந்து விலகியிருந்த வேகப்பந்து வீச்சாளர் ஆடம் மில்னே நியூசிலாந்தின் டி20 உலகக் கோப்பை அணியில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். நியூசிலாந்து வீரர் மார்ட்டின் கப்தில் 7-வது முறையாக டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க உள்ளார்.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இதே குழு அடுத்த மாதம் நடைபெற உள்ள பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு எதிரான டி20 முத்தரப்பு தொடரை கிறைஸ்ட்சர்ச்சில் விளையாடவுள்ளது.
8-வது டி 20 ஓவர் உலக கோப்பை தொடர் வரும் அக்டோபர் 16-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கிறது. டி-20 உலக கோப்பையில் 16 நாடுகள் பங்கேற்கின்றன.
நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாடும்.
கலை.ரா