INDvsNZ: 274 ரன்கள் இலக்கு.. நியூசிலாந்தை பழி தீர்க்குமா இந்தியா?

Published On:

| By Kavi

2023 உலகக்கோப்பை தொடரின் 21வது லீக் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிக்கொண்டன. இந்த தொடரில், இதுவரை அனைத்து அணிகளுமே 4 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், நியூசிலாந்து மற்றும் இந்தியா அந்த 4 போட்டிகளும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களில் உள்ளது.

இந்த போட்டியில் வெற்றி பெற்று முதலிடத்திற்கு முன்னேறப்போவது யார் என்ற இலக்குடனே 2 அணிகளும் இன்று (அக்டோபர் 22) களம் கண்டன.

முதலில் டாஸ் வென்ற ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்த போட்டியில், இந்திய அணி 2 முக்கிய மாற்றங்களை மேற்கொண்டது.

ஹர்திக் பாண்டியாவுக்கு பதில் சூர்யகுமார் யாதவ் அணியில் இணைந்தார். ஷர்துல் தாகூருக்கு பதில், முகமது ஷமி இந்த தொடரில் முதல் முறையாக இந்தியாவுக்காக களமிறங்கினார்.

நியூசிலாந்து அணிக்காக துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய வில் யங் மற்றும் தேவன் கான்வே, இந்திய அணியின் பும்ரா – ஷமி – சிராஜ் தாக்குதலை சமாளிக்க முடியாமல் தினறினர். இதன் விளைவாக, முதல் 10 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு நியூசிலாந்து 34 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

அடுத்து ஜோடி சேர்ந்த ரச்சின் ரவீந்திரா மற்றும் டெரில் மிட்சல், நியூசிலாந்து அணியை டாப் கியரில் நகர்த்தினர். இந்த இணை சிறப்பாக விளையாடி 3வது விக்கெட்டிற்கு 159 ரன்கள் சேர்த்து அசத்தியது. ரச்சின் ரவீந்திரா 75 (87) ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

இவரை தொடர்ந்து, மறுமுனையில் தனது அதிரடியை தொடர்ந்த டெரில் மிட்சல், 5 சிக்ஸ், 9 பவுண்டரியுடன், 127 பந்துகளில் 130 ரன்கள் சேர்த்து அசத்தினார்.

ஆனால், அடுத்து வந்தவர்கள் யாரும் இவருக்கு ஆதரவாக களத்தில் நின்று ரன் சேர்க்க தவறியதால், நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 273 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. 2023 உலகக்கோப்பை தொடரில், களமிறங்கிய முதல் போட்டியிலேயே 5 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார், முகமது ஷமி.

இந்த 274 ரன்கள் என்ற இலக்கை எட்டி, 2019 உலகக்கோப்பை அரையிறுதி தோல்விக்காக, நியூசிலாந்து அணியை பலி தீர்க்குமா ரோகித் படை?

முரளி

வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!

சென்னையில் குடியேறும் அமீர் கான் :  காரணம் என்ன?

600 படுக்கைகள்… அருணை பன்னோக்கு மருத்துவமனையை திறந்து வைத்த முதல்வர்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share