2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 16வது லீக் போட்டியில், நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிக்கொண்டன. விளையாடிய 3 போட்டிகளிலுமே நியூசிலாந்து அணி வெற்றியை சந்தித்திருந்த நிலையில், நடப்பு சாம்பியனான இங்கிலாந்தை வீழ்த்திய உத்வேகத்தில் ஆப்கான் அணி களமிறங்கியது.
இந்த போட்டியில், முதலில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் கேப்டன் ஹஸ்மதுல்லா ஷஹீதி பந்துவீச்சை தேர்வு செய்தார்.
பின் பேட்டிங் செய்ய வந்த நியூசிலாந்து அணிக்கு, தேவன் கான்வே 20 ரன்களுக்கு அட்டமிழந்து ஏமாற்றம் அளிக்க, மறுமுனையில் வில் யங் அரைசதம் கடந்து அசத்தினார்.
ஆனால், அதிர்ச்சி அளிக்கும் விதமாக அஸ்மதுல்லா ஓமர்சாய் மற்றும் ரஷீத் கான் ஆகியோரின் வேகம் – சூழல் கலந்த தாக்குதலில் சிக்கி, 2 ஓவர்களில் 3 விக்கெட்களை நியூசிலாந்து பறிகொடுத்தது.
வில் யங் 54 ரன்களுக்கும், ரச்சின் ரவீந்திரா 32 ரன்களுக்கும், டெரில் மிட்சல் 1 ரன்னுக்கும் வெளியேறினர்.
ஆனால் அடுத்து ஜோடி சேர்ந்த கேப்டன் டாம் லாதம் மற்றும் கிளென் பிலிப்ஸ், நியூசிலாந்து அணியை இந்த திடீர் விக்கெட் வீழ்ச்சியில் இருந்து மீட்டனர். 5வது விக்கெட்டிற்கு இந்த ஜோடி 144 ரன்கள் சேர்த்திருந்தபோது, கிளென் பிலிப்ஸ் 71 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின் டாம் லாதம் 68 ரன்களுக்கு வெளியேறினார்.
கடைசியில் வந்த மார்க் சாப்மன் 12 பந்துகளில் 25 ரன்கள் விளாச, நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 288 ரன்கள் சேர்த்திருந்தது.
289 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணிக்கு துவக்கத்திலேயே விக்கெட்கள் சீட்டுக்கட்டு போல் சரிய துவங்கியது. ரஹ்மானுல்லா குர்பாஸ் 11 ரன்களுக்கும், இப்ராஹிம் சத்ரான் 14 ரன்களுக்கும், கேப்டன் ஹஸ்மதுல்லா ஷஹீதி 8 ரன்களுக்கும் வெளியேறினார்.
பின் அஸ்மதுல்லா ஓமர்சாயுடன் (27 ரன்கள்) ஜோடி சேர்ந்த ரஹ்மத் ஷா (36 ரன்கள்) 4வது விக்கெட்டுக்கு 54 ரன்கள் சேர்த்தனர். ஆனால், ஆப்கான் அணியின் விக்கெட்கள் மீண்டும் சீட்டுக்கட்டு போல சரிய, 139 ரன்களுக்கு அந்த அணி ஆல்-அவுட் ஆனது.
149 ரன்கள் வித்தியாசத்தில் மீண்டும் ஒரு இமாலய வெற்றியை பதிவு செய்த நியூசிலாந்து அணி, புள்ளிப் பட்டியலில் இந்தியாவை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை தன்வசமாக்கிக் கொண்டது.
4 சிக்ஸ், 4 பவுண்டரி என 80 பந்துகளில் 71 ரன்கள் சேர்த்த கிளென் பிலிப்ஸ் ஆட்ட நாயகன் விருது வென்றார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
முரளி
மக்களின் வெறுப்பை மறைக்க சனாதனத்தை எதிர்க்கின்றனர்: எடப்பாடி
’லேபில்’ வெப் சீரிஸ்: ஜெய்க்கு ஒரு கம் பேக்!