2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடரில், தனக்கு இருக்கும் மிக மிக குறைவான அரையிறுதி வாய்ப்பை உயிரோட வைத்துக்கொள்ள, வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இலங்கை அணி, ஏற்கனவே அரையிறுதி வாய்ப்பை இழந்த வங்கதேச அணியை எதிர்கொண்டது.
இந்த போட்டியில், முதலில் டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
ஒருபுறம் துவக்க ஆட்டக்காரர் குஷல் பெரேரா 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தாலும், மறுபுறத்தில் பதும் நிசங்கா பொறுப்பாக 41 ரன்கள் சேர்த்தார்.
3வது வீரராக களமிறங்கிய இலங்கை அணியின் கேப்டன் குஷல் மெண்டிஸ் 19 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.
இவரின் விக்கெட்டிற்கு பிறகு களத்திற்கு வந்த சரித் அசலங்கா, இலங்கை அணிக்கு தேவையான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் விளாசி அசத்தினார்.
அசலங்கா 6 பவுண்டரி, 5 சிக்ஸ்களுடன் 105 பந்துகளில் 108 ரன்கள் விளாசி இருந்தார்.
இவருடன் பார்ட்னர்ஷிப் அமைத்து, சதீரா சமரவிக்ரமா 41 ரன்களும், தனஞ்சியா டி சில்வா 34 ரன்களும், மஹீஸ் தீக்சனா 22 ரன்களும் சேர்க்க, இலங்கை அணி இறுதியில் 279 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
பின் களமிறங்கிய வங்கதேச அணிக்கு, துவக்கம் தடுமாற்றமாக அமைந்தது. துவக்க ஆட்டக்காரர்கள் தன்சித் ஹாசன் 9 ரன்களும். லிட்டன் தாஸ் 23 ரன்களுக்கும் வெளியேறினர்.
ஆனால், 3வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த நஜ்முல் ஹொசைன் ஷன்டோ மற்றும் கேப்டன் ஷகிப் அல் ஹசன், இருவரும் சேர்த்து அசத்தினர்.
நஜ்முல் ஹொசைன் ஷன்டோ 90 ரன்களுக்கும், ஷகிப் அல் ஹசன் 82 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, பின் களமிறங்கிய முகமதுல்லா, தவ்ஹித் ஹிரிதாய் உள்ளிட்டோரின் சிறு சிறு கேமியோ ஆட்டத்தால், வங்கதேச அணி 42வது ஓவரிலேயே இலக்கை எட்டியது.
இந்த போட்டியில், பேட்டிங்கில் 82 ரன்கள் விளாசி, பந்துவீச்சில் 2 விக்கெட்களை கைப்பற்றி அசத்திய ஷகிப் அல் ஹசன், ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
மேலும், இந்த போட்டியில் தோல்வியடைந்ததன் மூலம், இலங்கை அணி அரையிறுதி ரேஸில் இருந்து வெளியேறியுள்ளது.
இலங்கையுடன், இங்கிலாந்து மற்றும் வங்கதேசம் ஆகிய 2 அணிகள் முன்னதாகவே அரையிறுதிக்கு தகுதி பெரும் வாய்ப்பை இழந்துவிட்டது.
ஏற்கனவே, இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா தங்கள் அரையிறுதி இடங்களை உறுதி செய்துவிட்ட நிலையில், மீதமுள்ள 2 இடங்களுக்காக, தற்போது ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் நெதர்லாந்து ஆகிய 5 அணிகள் பலப்பரீட்சையில் இறங்க உள்ளன.
முரளி
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…