T20 World Cup 2022 : அடுத்தடுத்து வெற்றி… முன்னிலையில் நெதர்லாந்து!
அக்டோபர் 16 ம் தேதியிலிருந்து டி20 உலகக்கோப்பை ஆஸ்திரேலியாவில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.
ஆஸ்திரேலியா ஜீலோங்கில் உள்ள சைமண்ட்ஸ் மைதானத்தில் இன்று (அக்டோபர் 18) நடைபெற்ற முதல் சுற்று போட்டியில் நமீபியா, நெதர்லாந்து அணிகள் மோதினர். இதில் அபாரமாக ஆடிய நெதர்லாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டி 20 உலகக்கோப்பையில் அக்டோபர் 22 ஆம் தேதி முதல் தான் சூப்பர் 12 அணிகள் மோதும் போட்டிகள் ஆரம்பமாகின்றன. இதில் ஏற்கெனவே 8 அணிகள் நேரடியாக உள்நுழைந்த நிலையில் எஞ்சிய 4 இடங்களுக்காக முதல் சுற்றுப் போட்டிகள் தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகின்றன.
அதன்படி கடந்த 16ம் தேதி நடைபெற்ற உலகக்கோப்பை முதல் போட்டியில் ஆசியக்கோப்பை சாம்பியனான இலங்கையை 55 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தது நமீபியா அணி. அடுத்ததாக ஐக்கிய அரபு அமீரகத்தை எதிர்த்து விளையாடிய நெதர்லாந்து அணியும் வெற்றி பெற்றது.
இந்நிலையில் தங்களது முதல் போட்டியில் வெற்றி பெற்ற நமீபியா மற்றும் நெதர்லாந்து ஆகிய இரு அணிகளும் இன்று மோதியதால் ரசிகர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த நமீபியா 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 121 ரன்கள் குவித்தது.
தொடர்ந்து விளையாடிய நெதர்லாந்து அணி 19.3 ஓவர்களில் 122 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் நமீபியாவை வீழ்த்தியது.
அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்த ஆட்டத்தில் நெதர்லாந்து அணி இரண்டாவது முறையாக வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் பட்டியலில் முன்னிலை பெற்றுள்ளது. இதன்மூலம் சூப்பர் 12 சுற்றுக்குள் நுழைவதான வாய்ப்பு நெதர்லாந்து அணிக்கு பிரகாசமாகி உள்ளது.
பவித்ரா
ஆசியக்கோப்பை – பாகிஸ்தானுக்கு இந்திய அணி செல்லுமா?: ஜெய்ஷா பதில்!
ஜெ.வுக்கு ஸ்லோ பாய்சனா? தலையில் அடித்தார்களா? முகத்தில் துளைகளா? ஆணைய முடிவு என்ன?