வாடகை கொடுக்க முடியல… வருத்தப்பட்ட கோச்… ஆஷிஷ் நெக்ரா செய்தது என்ன தெரியுமா?

Published On:

| By Kumaresan M

இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெக்ரா இந்தியாவுக்காக 17 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட் விளையாடியவர். ஜவஹல் ஸ்ரீநாத், ஜாகீர் கானுடன் இணைந்து பணியாற்றியவர். 2003 ஆம் ஆண்டு உலகக் கோப்பை மற்றும் 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற அணியிலும் இடம் பெற்றவர். தற்போது, ஐ.பி.எல் அணிகளில் பணியாற்றி வருகிறார். 2022 ஆம் ஆண்டு குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு தலைமை பயிற்சியாளராக நெக்ரா இருந்த போது, அந்த அணி கோப்பையை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

விஷயம் இதுவெல்லாம் அல்ல. நெக்ராவின் உதவும் குணம் பற்றி கிரிக்கெட் வர்ணணையாளர் பதம்ஜீத் ஷெராவத் ஒரு விஷயத்தை குறிப்பிட்டு தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது,

சிறு வயதில் தாரக் ஷின்கா என்ற பயிற்சியாளரிடத்தில் நெக்ரா பயிற்சி பெற்றார். 1969 ஆம் ஆண்டு முதல் புது டெல்லியில் சோன்னட் கிரிக்கெட் கிளப்பில் தாரக் பயிற்சியாளராக இருந்தார். நெக் மட்டுமின்றி ஷிகர் தவான், ரிஷப் பண்ட், மனோஜ் பிரபாகர் உள்ளிட்ட பல இந்திய வீரர்களையும் இவர் பட்டை தீட்டியுள்ளார். ஒரு கட்டத்தில் நெக்ரா வளர்ந்து இந்திய அணியில் இடம் பெற்று கோடிகளில் சம்பளம் பெறும் போதும், தாரக் சின்கா எந்த வளர்ச்சியும் இல்லாமல் அப்படியே இருந்துள்ளார்.

மேலும், சோனட் கிளப்புக்கு பயிற்சி அளிக்கவும் தாமதமாக வருவதை வழக்கமாக வைத்திருந்துள்ளார். இதை பார்த்த நெக்ரா, ‘நீங்கள் இப்படி லேட்டாக வந்தால், எப்படி குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்க முடியும்? ‘என்று விளையாட்டாக கேட்டுள்ளார். அதற்கு தாரக் சின்கா … ‘உனக்கு என்னப்பா இந்தியன் டீம் பிளேயர். பங்களாவில் இருக்கிறாய்.. எனது வீட்டு ஓனர் வாடகை கொடுக்கலனு 2 நாள்ள வீட்டை காலி பண்ண சொல்லிட்டாரு. அதனான் லேட்’ என்று பதில் அளித்துள்ளார்.

தாரக் சின்காவின் இந்த பதில் ஆஷிஷ் நெக்ராவின் மனதை என்னவோ செய்துள்ளது. இரு நாட்கள் கழித்து ஒரு மழை நாளில் ஆஷிஷ் நெக்ரா கிளப்புக்கு லேட்டாக வந்துள்ளார். அப்போது, ‘என்னப்பா லேட்’ என்று ஆஷிஷ் நெக்ராவிடத்தில் தாரக் சின்கா பதிலுக்கு கேலியாக கேட்டுள்ளார். இந்த சமயத்தில் அதெல்லாம் ஒன்றுமில்லை என்று கூறியபடி தாரக் சின்காவை நெருங்கிய ஆஷிஷ் நெக்ரா அவரின் கையில் ஒரு வீட்டின் சாவியை திணித்துள்ளார். இதை கண்டு தாரக் சின்கா மூச்சு பேச்சின்றி நின்று விட்டார். பீல்டை தாண்டி உதவி செய்வதில் நெக்ரை உயர்ந்த மனம் கொண்டவர்.’ இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட்டில் தாரக் சின்கா புகழ்பெற்ற கிரிக்கெட் கோச் ஆவார். 12 இந்திய வீரர்களையும் 100 முதல் தர கிரிக்கெட் வீரர்களையும் உருவாக்கியுள்ளார். இந்திய மகளிர் அணி பயிற்சியாளராகவும் இருந்துள்ளார். 2018 ஆம் ஆண்டு இந்திய அரசு அவருக்கு துரோணாச்சர்யா விருது வழங்கி கௌரவித்தது. 2021ஆம் ஆண்டு தாரக் சின்கா மறைந்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share