ஆண்கள் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்திய ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டி இன்று (ஆகஸ்ட் 9) அதிகாலை நடைபெற்றது.
இந்தப் போட்டியில் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் 92.97மீ தூரம் ஈட்டி எறிந்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 89.45மீ தூரம் எறிந்து வெள்ளிப்பதக்கமும், கரீபியன் தீவில் உள்ள க்ரெனடா நாட்டைச் சேர்ந்த ஆண்டர்சன் பீட்டர்ஸ், 88.54மீ தூரம் எறிந்து வெண்கலப்பதக்கமும் வென்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நீரஜ் சோப்ரா, “கடந்த 2 முதல் 3 ஆண்டுகளாக எனக்கு அடிக்கடி காயம் ஏற்பட்டது. நான் கடுமையான பயிற்சி செய்தாலும், எனக்கு ஏற்பட்ட காயங்கள் மீது கவனம் செலுத்த வேண்டி இருந்தது.
கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் அர்ஷத் நதீமுடன் விளையாடி வருகிறேன். அவருக்கு எதிரான ஒரு போட்டியில் கூட நான் தோல்வி அடைந்தது இல்லை. இன்றைய போட்டியில் அர்ஷத் மிகவும் சிறப்பாக ஈட்டி எறிந்தார். தங்கப்பதக்கம் வென்ற அவருக்கும் அவரது நாட்டிற்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.
வெள்ளிப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
திரவுபதி முர்மு, “பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்த நீரஜ் சோப்ராவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
தொடர்ந்து இரண்டு ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அவரை நினைத்து இந்தியா பெருமை கொள்கிறது. அவரது சாதனை வரும் தலைமுறையினருக்கு ஊக்கமளிக்கும். நீரஜ் சோப்ரா எதிர்காலத்தில் அதிக பதக்கங்களையும் பெருமையையும் இந்தியாவிற்கு தேடி தருவார்” என்று தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி, “நீரஜ் சோப்ரா தனது திறமையை வெளிப்படுத்தி மீண்டும் தான் ஒரு சிறந்த ஆளுமை என்பதை நிரூபித்துள்ளார். வெள்ளிப் பதக்கம் வென்ற அவருக்கு வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பெண் வயிற்றில் இருந்த க்ளிப்… ரூ.7 லட்சம் நஷ்டஈடு வழங்க மருத்துவமனைக்கு உத்தரவு!
டாப் 10 நியூஸ்: தமிழ்ப் புதல்வன் திட்டம் துவக்கம் முதல் ‘அந்தகன்’ ரிலீஸ் வரை!