டைமண்ட் லீக் போட்டியில் வெள்ளி வென்ற நீரஜ் சோப்ரா

விளையாட்டு

காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள், ஆசிய விளையாட்டு போட்டிகள், உலக சாம்பின்ஷிப், ஒலிம்பிக் போட்டிகள் என உலகின் மிக முக்கிய விளையாட்டு தொடர்களில், ஈட்டி எறிதலில் தொடர் வெற்றிகளை கண்ட இந்தியாவின் ‘தங்க மகன்’ நீரஜ் சோப்ரா, தற்போது யூஜின் டைமண்ட் லீக் இறுதிப் போட்டியிலும் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

அமெரிக்காவில் உள்ள ஒரேகான் மாகாணத்தின் யூஜின் நகரில் நடைபெற்ற இந்த டைமண்ட் லீக் இறுதிப்போட்டியில், நீரஜ் சோப்ரா 83.80 மீ தூரத்திற்கு ஈட்டியை எறிந்து, இந்த வெள்ளிப் பதக்கத்தை தன்வசமாக்கியுள்ளார்.

இந்த போட்டியில், செக் குடியரசை சேர்ந்த ஜக்குப் வட்லெஜ்ச் 84.24 மீ தூரத்திற்கு ஈட்டியை எறிந்து தங்கப் பதக்கத்தையும், பின்லாந்தை சேர்ந்த ஆலிவர் ஹெலாண்டர் 83.74 மீ தூரத்திற்கு ஈட்டியை எறிந்து வெண்கல பதக்கத்தையும் வென்றுள்ளனர்.

இந்த இறுதிப்போட்டிக்கு முன்னதாக, தோஹா, லாசன்னே, மொனாக்கோ மற்றும் ஜூரிச் ஆகிய நகரங்களில், 2023 டைமண்ட் லீக் தொடரின் ஈட்டி எறிதல் போட்டிக்கான தகுதிச்சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன.

அவற்றில் தோஹா மற்றும் லாசன்னே ஆகிய நகரங்களில் நடைபெற்ற போட்டிகளில், நீரஜ் சோப்ரா முறையே 88.67 மீ மற்றும் 87.66 மீ தூரத்திற்கு ஈட்டியை எறிந்து முதலிடத்தையும், ஜூரிச்சில் நடைபெற்ற போட்டியில் 85.71 மீ தூரத்திற்கு ஈட்டியை எறிந்து 2வது இடத்தையும் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, 2022ம் ஆண்டு ஜூரிச்சில் நடைபெற்ற டைமண்ட் லீக் இறுதிப்போட்டியில் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நீரஜ் சோப்ராவுக்கு வழங்கப்பட்ட பரிசுத்தொகை எவ்வளவு?

யூஜின் டைமண்ட் லீக் இறுதிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றதற்காக, நீரஜ் சோப்ராவுக்கு 12,000 அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ.10 லட்சம்) பரிசாக வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, தோஹா மற்றும் லாசன்னே ஆகிய நகரங்களில் நடைபெற்ற 2023 டைமண்ட் லீக் தகுதி போட்டியில் முதலிடம் பிடித்ததற்காக, தலா 10,000 அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ.8.3 லட்சம்) மற்றும் ஜூரிச் டைமண்ட் லீக் தகுதி போட்டியில் 2ம் இடம் பிடித்ததற்காக 6,000 அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ.5 லட்சம்) பரிசுத்தொகையாக நீரஜ் சோப்ராவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

முரளி

விஸ்வகர்மா திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

பெண்கள் முன்னேற்ற ஆய்வு மைய இயக்குநராக முதல் தமிழ் பெண் தேர்வு!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *