உலக தடகள சாம்பியன்ஷிப்: சாதனை படைத்த நீரஜ் சோப்ரா

Published On:

| By Monisha

neeraj chopra won gold medal

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

19-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் கடந்த 9 நாட்களாக நடந்து வந்தது. ஈட்டி எறிதலில் இறுதிப்போட்டிக்கு இந்தியாவின் நீரஜ் சோப்ரா நேரடியாகத் தகுதி பெற்றார். அவருடன் இந்திய வீரர்கள் டி.பி.மானு மற்றும் கிஷோர் ஜெனாவும் தகுதி பெற்றனர்.

நேற்று (ஆகஸ்ட் 27) இரவு ஆண்களுக்கான ஈட்டி எறிதல் இறுதிப்போட்டி நடைபெற்றது. இறுதி களத்தில் 12 பேரில் 3 இந்தியர்கள் இருந்ததால் ரசிகர்களிடத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

ஆனால் எதிர்பார்த்தபடியே ஒலிம்பிக் சாம்பியன் நீரஜ் சோப்ரா அதிகபட்சமாக 88.17 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். இதன் மூலம் 40 ஆண்டுக்கால உலக தடகள வரலாற்றில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற மகத்தான சாதனையை நிகழ்த்தி வரலாற்றில் தடம் பதித்துள்ளார் நீரஜ் சோப்ரா. பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் 87.82 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து 2வது இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் பெற்றார்.

மற்ற இந்திய வீரர்களான கிஷோர் குமார் (84.77 மீட்டர்), டி.பி.மனு (84.14 மீ) முறையே 5 மற்றும் 6-வது இடங்களைப் பிடித்தனர்.

நீரஜ் சோப்ராவின் பதக்கம், உலக தடகளத்தில் இந்தியாவுக்கு கிடைத்த 3-வது பதக்கமாக அமைந்துள்ளது. இதற்கு முன்பு நீரஜ் சோப்ரா கடந்த ஆண்டு வெள்ளிப்பதக்கமும், 2003-ம் ஆண்டில் அஞ்சு ஜார்ஜ் நீளம் தாண்டுதலில் வெண்கலமும் வென்று இருந்தனர்.

நீரஜ் சோப்ராவின் இந்த வெற்றியை அவரது சொந்த கிராமமான ஹரியானாவில் உள்ள கந்த்ராவில் நீரஜின் குடும்பத்தினரும் ஊர் மக்களும் கொண்டாடி வருகின்றனர்.

மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாகூர், “நீரஜ் சோப்ரா மீண்டும் சாதித்து விட்டார். புடாபெஸ்டில் நடைபெற்று வரும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் இந்திய தடகளத்தின் தங்க மகன் வெற்றி பெற்றார்.

இதன் மூலம் உலக தடகள சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தங்கம் வென்ற முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் நீரஜ் சோப்ரா.

உங்கள் (நீரஜ் சோப்ரா) சாதனைகளால் ஒட்டுமொத்த தேசமும் பெருமிதம் கொள்கிறது, இந்த தருணம் இந்திய விளையாட்டு வரலாற்றில் என்றென்றும் நினைவுகூரப்படும்” என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் தங்க மகன் நீரஜ் சோப்ராவிற்கு தொடர்ந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

மோனிஷா-

நிலவுப் பரப்பு ஆய்வும், காலை உணவுத் திட்டமும்: வரலாற்று சாதனை என்பது என்ன?

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel