தோஹா ‘டைமண்ட் லீக்’ தடகளப் போட்டியில் முதல்முறையாக தங்கம் வென்றார் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா.
டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா தொடர்ந்து பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகிறார். அந்த வரிசையில் தோஹா டைமண்ட் லீக் போட்டியில் நீரஜ் சோப்ரா 88.67 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
நீரஜ் சோப்ரா முதல் வாய்ப்பில் 88.67 மீட்டர் தூரமும், இரண்டாம் வாய்ப்பில் 86.07 மீட்டர் தூரமும், மூன்றாம் வாய்ப்பில் 85.47 மீட்டர் தூரமும், கடைசி வாய்ப்பில் 84.37 மீட்டர் தூரமும் ஈட்டியை எறிந்தார்.
செக் குடியரசு வீரர் ஜேக்கப் வேட்லக் 88.63 மீட்டர் தூரம் எறிந்து இரண்டாவது இடத்தையும், கிரெனடா வீரர் ஆண்டர்சன் பீட்டர்ஸ் 85.88 மீட்டர் தூரம் எறிந்து மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.
இந்த வெற்றி குறித்துப் பேசிய நீரஜ் சோப்ரா, “நடப்பு ஆண்டுக்கான விளையாட்டு சீசனை சிறப்பாக தொடங்கியுள்ளேன். என் ஆட்டத்தைப் பார்க்கும் போது, என் மனதிற்கு நிறைவாக உள்ளது. நான் ஈட்டியை எறியும் தூரத்தில் சீராக இருக்க வேண்டும் என்று கவனம் செலுத்தி வருகிறேன். அடுத்தடுத்து மூன்று சாம்பியன்ஷிப் தொடர்கள் வரவுள்ளது. முதல் தொடரிலேயே 8 புள்ளிகளைப் பெற்றுள்ளது நம்பிக்கை அளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
நீரஜிற்கு குவியும் பாராட்டுகள்
நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் வென்றதற்கு சமூக வலைத்தளங்களில் பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
பிரதமர் மோடி, “ஆண்டின் முதல் நிகழ்வு மற்றும் முதல் நிலை. 88.67 மீட்டர் ஈட்டி எறிந்து நீரஜ் சோப்ரா தோஹா டைமண்ட் லீக்கில் ஜொலித்தார். முன்னோக்கி செல்லும் அவரது முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்” என்று வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் அவரது ட்விட்டர் பக்கத்தில், “88.67 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தோஹா டைமண்ட் லீக் போட்டியில் ஆதிக்கம் செலுத்தியுள்ளார். தேசத்தை மீண்டும் பெருமைப்படுத்திய உண்மையான சாம்பியன்.இந்த வெற்றிக்கு வாழ்த்துக்கள் நீரஜ்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரின் ரிஜிஜு, “இந்தியாவின் பெருமைக்குரிய நீரஜ் சோப்ரா மதிப்புமிக்க தோஹா டைமண்ட லீக் போட்டியில் 88.67 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து மீண்டும் தேசத்தை பெருமைப்படுத்தியுள்ளார். வாழ்த்துக்கள் நீரஜ் சோப்ரா” என்று குறிப்பிட்டுள்ளார்.
மோனிஷா
“சிதம்பரம் தீட்சிதர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூடாதா?”: சேகர் பாபு கேள்வி!