தலைநகரில் போராடி வரும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு நீதி கிடைக்க பாரபட்சமற்ற நடவடிக்கை வேண்டும் என்று ஒலிம்பிக் நாயகன் நீரஜ் சோப்ரா இன்று (ஏப்ரல் 28) வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடந்த 2011ம் ஆண்டு முதல் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக இருந்து வரும் பாஜக எம்.பியான பிரிஜ் பூஷன் சரண் சிங், பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக மல்யுத்த வீராங்கனைகள் கடந்த ஜனவரி மாதம் குற்றம் சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு உறுதியளித்தது. ஆனால் 3 மாதங்களுக்கு மேலாகியும் குற்றம் சாட்டப்பட்ட பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில், கடந்த 23ஆம் தேதி முதல் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீராங்கனைகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீராங்கனைகளான வினேஷ் போகத், சாக்சி மாலிக், சங்கீதா போகத், மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா உள்ளிட்டோர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

யாருக்கு பயப்படுகிறீர்கள்?
தொடர்ந்து 6 நாட்களாக சாலையில் அமர்ந்து மல்யுத்த வீராங்கனைகள் போராடி வரும் நிலையில் இதுகுறித்து இந்திய கிரிக்கெட் வீரர்களும், நாட்டின் மற்ற சிறந்த விளையாட்டு வீரர்களும் மௌனம் சாதிப்பது ஏன் என்று இந்தியாவின் தலைசிறந்த மல்யுத்த வீராங்கனைகளில் ஒருவரான வினேஷ் போகத் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் “ஒட்டுமொத்த இந்தியாவும் கிரிக்கெட்டை கொண்டாடுகிறது. ஆனால் ஒரு கிரிக்கெட் வீரர் கூட நீதி கேட்கும் எங்களது போராட்டத்திற்கு ஆதரவாக குரல் கொடுக்கவில்லை. நீங்கள் எங்களுக்கு ஆதரவாக பேசவில்லை என்றாலும் குறைந்தபட்சம் யாருக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றாவது சொல்லுங்கள்.
அமெரிக்காவில் பிளாக் லைவ்ஸ் மேட்டர் இயக்கத்தின் போது, நமது கிரிக்கெட் வீரர்கள் தங்கள் ஆதரவைக் காட்டினார்கள். ஆனால் சகநாட்டைச் சேர்ந்த நாங்கள் அந்த அளவுக்கு கூட தகுதியானவர்கள் இல்லையா?
கிரிக்கெட் வீரர்களுடன் பேட்மிண்டன், குத்துச்சண்டை என மற்ற விளையாட்டு வீரர்களும் இந்த விஷயத்தில் அமைதி காப்பது வேதனை அளிக்கிறது. நீங்கள் எல்லாம் யாருக்கு பயப்படுகிறீர்கள்? என்று காட்டமாக கேள்வி எழுப்பினார்.

பாரபட்சமற்ற விசாரணை வேண்டும்
இந்நிலையில் நீதி கேட்டு போராடி வரும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதலில் இந்தியாவிற்கு முதல் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார்.
அவர், “நமது விளையாட்டு வீரர்கள் நீதி கேட்டு தெருக்களில் போராடுவதைப் பார்ப்பது எனக்கு வேதனை அளிக்கிறது. நமது மகத்தான தேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தவும், நம்மை பெருமைப்படுத்தவும் அவர்கள் கடுமையாக உழைத்துள்ளனர்.
விளையாட்டு வீரராகவோ அல்லது ஒரு குடிமகனாகவோ, ஒவ்வொரு இந்தியரின் ஒருமைப்பாடு மற்றும் கண்ணியத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற பொறுப்பு எங்களுக்கு உள்ளது.
இது ஒரு முக்கியமான பிரச்சினை. இதில் பாரபட்சமற்ற மற்றும் வெளிப்படையான முறையில் விசாரணை நடத்தப்பட வேண்டும். உரிய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து நீதியை உறுதி செய்ய வேண்டும்.” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
தமிழ்த்தாய் வாழ்த்து பாதியில் நிறுத்தம்: வைரமுத்து வருத்தம்!