சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற டைமண்ட் லீக் தொடரில் 88.44 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை நீரஜ் சோப்ரா படைத்துள்ளார்.
சுவிட்சர்லாந்து நாட்டின் சூரிச் நகரில் டைமண்ட் லீக் தடகள தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய அணியின் சார்பாக பங்கேற்ற ஒலிம்பிக் நாயகன் நீரஜ் சோப்ரா மூன்றாவது முறையாக இறுதி போட்டிக்கு தகுதிபெற்றார்.
2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளிலும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற நீரஜ், ஏழாவது மற்றும் நான்காவது இடத்தைப் பிடித்திருந்தார்.
யாரும் தொட முடியாத தூரம் பாய்ந்த ஈட்டி!
நேற்று நடந்த இறுதிச்சுற்றில் முதல் முயற்சியில் ஃபவுலுடன் தொடங்கிய சோப்ரா, இரண்டாவது முயற்சியில் 88.44 மீட்டர் தூரத்திற்கு எறிந்து முதலிடத்தை பிடித்தார்.
அதனை தொடர்ந்து தனது அடுத்த நான்கு எறிதல்களில் முறையே 88.00 மீ, 86.11 மீ, 87 மீ மற்றும் 83.60 மீ என்ற தூரத்திற்கு ஈட்டி எறிந்தார்.
அதே வேளையில் பிற நாட்டைச் சேர்ந்த போட்டியாளர்கள் யாரும் சோப்ராவின் இலக்கை எட்ட முடியவில்லை. இதனால் அதிக தூரத்திற்கு (88.44 மீ) ஈட்டி எறிந்த நீரஜ் சோப்ரா டைமண்ட் லீக் தொடரின் ஈட்டி எறிதல் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார்.
இதன் மூலம் டைமண்ட் லீக் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் முதல் இந்தியர் என்ற பெருமையையும் நீரஜ் சோப்ரா பெற்றுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 26ம் தேதி நடைபெற்ற டயமண்ட் லீக் தொடரின் லாசேன் லெக்கை (89.08 மீட்டர்) வென்று நீரஜ் சோப்ரா இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.
மேலும் இந்த தொடரில் ஆறு முறை 88 மீட்டருக்கு மேலாக ஈட்டி எறிந்து சாதனை படைத்துள்ளார்.
காயத்தில் இருந்து மீண்டு வந்து சாதனை!
ஜூலை மாதம் அமெரிக்காவில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றிருந்தார் நீரஜ் சோப்ரா.
அதனைதொடர்ந்து அவரது இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை நடைபெற்ற பர்மிங்காம் காமன்வெல்த் போட்டியில் நீரஜ் பங்கேற்கவில்லை.
இந்நிலையில் காயத்தில் இருந்து மீண்டு தற்போது டைமண்ட் லீக் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் முதல் இந்தியர் என்ற பெருமையை நீரஜ் சோப்ரா பெற்றுள்ளார். அவருக்கு சமூகவலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.
ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற செக் குடியரசின் ஜக்குப் வாட்லெஜ்ச் தனது நான்காவது முயற்சியில் 86.94 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து இரண்டாவது இடத்தைப் பிடித்தார். ஜெர்மனியின் ஜூலியன் வெபர் 83.73 மீட்டர் தூரம் எறிந்து மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.
கிறிஸ்டோபர் ஜெமா
வரலாற்று சாதனை படைத்த நீரஜ் சோப்ரா: குவியும் வாழ்த்துக்கள்!