பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்திலுள்ள மியான்சானு என்ற கிராமத்தை சேர்ந்த சாதாரண கட்டடத் தொழிலாளியின் 3வது மகன்தான் அர்ஷத் நதீம். வீட்டில் மொத்தம் 7 குழந்தைகள். வறுமையின் பிடியில் தவித்த குடும்பத்தில் இருந்து வந்து பாரீஸ் ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ராவை பின்னுக்கு தள்ளி அர்ஷத் தங்கம் வென்று சாதித்துள்ளார்.
ஒலிம்பிக் போட்டியை பொறுத்தவரை, பாகிஸ்தான் தனிநபர் பிரிவில் தங்கம் வாங்கியதே இல்லை. அந்த குறையையும் தீர்த்து வைத்துள்ளார் அர்ஷத் நதீம்.
அதோடு ஒலிம்பிக்கில் 40 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் நாட்டுக்கு முதன்முறையாக தங்கம் கிடைத்துள்ளது. இத்தனை சாதனைகள் படைத்த அர்ஷத் நதீம் கடந்த 7,8 ஆண்டுகளாக ஒரு பழைய ஈட்டியையே பயன்படுத்தி வந்துள்ளார். பல முறை புதிய ஈட்டியை வாங்கி தரும்படி பாகிஸ்தான் விளையாட்டுத்துறை அதிகாரிகளிடம் கேட்டும் பலன் இல்லை.
கடந்த 5 மாதங்களுக்கு முன்பு, அர்ஷத் நதீம் பழைய ஈட்டியை வைத்து கொண்டு கஷ்டப்படுவதை அறிந்த இந்திய வீரர் நீரஜ் சோப்ரா அதிர்ச்சியடைந்தார். எறியவே லாயக்கில்லாத ஈட்டியை வைத்து கொண்டு ஒலிம்பிக் போன்ற பெரிய போட்டிகளில் சாதிப்பது சாத்தியமில்லை என்பதும் நீரஜூக்கு தெரியும். இதையடுத்து, பாகிஸ்தான் அதிகாரிகளை தொடர்பு கொண்ட நீரஜ் சோப்ரா, தயவு செய்து அர்ஷத்துக்கு தேவையான உதவிகளை செய்யும் படி கோரிக்கை விடுத்துள்ளார்.
இருவருக்குமுள்ள நட்பை ஏற்கனவே அறிந்த பாகிஸ்தான் அதிகாரிகள் அதற்கு பிறகே , அர்ஷத்துக்கு புதிய ஈட்டி வாங்க ஸ்பான்ஷர் செய்துள்ளனர். இதற்கிடையே, தங்கம் வென்ற அர்ஷத் நேற்று (ஆகஸ்ட் 10) தாய்நாடு திரும்பினார். லாகூர் விமான நிலையத்தில் அவருக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், திறந்த வெளி பஸ்சில் ஊர்வலமாகவும் அழைத்து செல்லப்பட்டார். அர்ஷத்தின் தாயார் நீரஜ் பற்றி கூறுகையில், நீரஜ்ஜூம் தனது மகன் போன்றவர்தான். ஒலிம்பிக்கில் எனது இரு மகன்களும் தங்கமும் வெள்ளியும் வென்றுள்ளனர் என்றும் குறிப்பிட்டார். ஒரு தங்கப்பதக்கத்துக்கு பின்னால், இத்தனை கஷ்டங்கள் அடங்கியிருக்கிறது என்பதுதான் பலரும் அறியாதது.
எம்.குமரேசன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
“ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றது” – அதானி குழுமம் விளக்கம்!
மட்டன் சாப்பாடு கேட்ட கணவர்… கொஞ்சம் கூட யோசிக்காமல் உயிரை எடுத்த மனைவி!