சீனாவின் ஹாங்சோ நகரில் 19-வது ஆசிய விளையாட்டு போட்டி விமரிசையாக நடந்து வருகிறது.
ஆசியா கண்டத்தின் இந்த மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவில் 45 நாடுகளை சேர்ந்த 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள நிலையில், இந்திய வீரர்கள் நாள்தோறும் பதக்கங்களை வென்று சாதனை படைத்து வருகின்றனர்.
தொடரின் 12வது நாளான இன்றும் காலை முதலே இந்திய வீரர்கள் தடகளம், குத்துச்சண்டை, வில்வித்தை, மல்யுத்தம் போன்ற போட்டிகளில் பதக்கம் வென்று அசத்தி வருகின்றனர்.
தங்கம், வெள்ளி வென்ற இந்தியர்கள்!
இந்த நிலையில், இன்று நடைபெற்ற ஆடவருக்கான ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியிலும் இந்தியா ஆதிக்கம் செலுத்தியது.
அதன்படி அதிகபட்சமாக 88.88 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து முதலிடம் பிடித்த இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் வென்றார்.
அவரைத்தொடர்ந்து 87.54 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து மற்றொரு இந்திய வீரரான கிஷோர் குமார் ஜெனா 2-ம் இடம் பிடித்து வெள்ளி பதக்கம் வென்றார்.
கள நடுவர்களுடன் முறையீடு!
இதற்கிடையே இந்திய வீரர்களுக்கு எதிராக கள நடுவர்கள் செயல்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நீரஜ் சோப்ரா தனது முதல் முயற்சி வீணடிக்கப்பட்டதும், கிஷோர் குமார் ஜெனாவின் 2வது முயற்சிக்கு விதிகளுக்கு மாறாக சிவப்புக் கொடி காட்டப்பட்டதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து இருவரும் நடுவர்களுடன் முறையிட்ட நிலையில், நீரஜ் சோப்ராவுக்கும் மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டு, ஜெனாவின் 2வது முயற்சியும் அங்கீகரிக்கப்பட்டது.
மோசமான நடுவர்கள்… இதுவே முதல் முறை!
இதுகுறித்து நீரஜ் சோப்ரா கூறுகையில், “ஈட்டி எறிதலில் எனது முதல் முயற்சி நன்றாக இருந்தது. அது எவ்வளவு தூரம் சென்றிருக்கும் என்று வீடியோவைப் பார்த்தபோது நடுவர்கள் அதனை அளவிடவில்லை என்பது தெரிந்தது.
ஆனால் அதற்குள் இரண்டாவது வீரர் தனது ஈட்டியை வீசினார்.
இதனால் நடுவர்கள் எனது ஈட்டியின் தூரத்தை அளக்க முடியவில்லை. இதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மீண்டும் ஈட்டி எறிய எனக்கு அவர்கள் வாய்ப்பளித்தனர்.
இதேபோன்று சக இந்திய வீரர்களான அன்னு ராணிக்கும் மற்றும் ஜெனாவுக்கும் நடந்தது. இவ்வளவு பெரிய போட்டியில் இதுபோன்ற சம்பவம் நடப்பது இதுவே முதல் முறை.
சர்வதேச போட்டிகளில் வேறு எங்கும் இதுபோன்று நடந்ததை நான் கண்டதில்லை” என்று நீரஜ் சோப்ரா வேதனை தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த இந்திய தடகள சம்மேளனத்தின் துணைத் தலைவர் அஞ்சு பாபி ஜார்ஜ், ”உலக அரங்கில் ஈட்டி எறிதலில் தொடர்ந்து இந்தியாவுக்காக பதக்கம் வென்று சாதனை படைத்து வரும் நீரஜ் சோப்ராவை தடுக்கும் முயற்சியாகவும், இந்தியர்களை ஏமாற்றும் முயற்சியாகவும் இதை நான் பார்க்கிறேன்” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்கும் ஏ.ஆர்.ரகுமான்
பால் உற்பத்தியாளர்களுக்கு லிட்டருக்கு ரூ.1 ஊக்கத்தொகை!