எஃப்ஐஎச் ஆடவர் உலகக் கோப்பை போட்டியில் இந்திய ஹாக்கி அணி கோப்பையை வென்றால் ஒவ்வொரு வீரர்களுக்கும் ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என்று ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் நேற்று (ஜனவரி 5) அறிவித்துள்ளார்.
எஃப்ஐஎச் ஆடவர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டி ஒடிசா மாநிலம் புபனேஸ்வர் மற்றும் ரூர்கேலாவில் ஜனவரி 13-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டியில் 16 நாடுகளை சேர்ந்த அணிகள் பங்குபெறுகின்றன.
போட்டி நடைபெறும் ரூர்கேலாவில் பிர்சா முண்டா ஹாக்கி விளையாட்டு மைதானத்தை முதல்வர் நவீன் பட்நாயக் நேற்று திறந்து வைத்தார்.
ரூ.251 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட இந்த விளையாட்டு மைதானத்தில் 21 ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் உட்கார்ந்து போட்டிகளை கண்டுகளிக்கலாம்.
விளையாட்டு மைதானத்தை திறந்து வைத்த பின்னர் வீரர்கள் மத்தியில் நவீன் பட்நாயக் பேசும்போது,
“பிர்சா முண்டா விளையாட்டு மைதானம் ஒடிசா மாநில அரசால் நமது நாட்டிற்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு. இது ஹாக்கித் துறையில் இந்தியாவை ஒரு அதிகார மையமாக மாற்றும். மேலும், பல தசாப்தங்களுக்கு ஹாக்கியில் வலுவான அணியாக இந்தியா மாற வழிவகுக்கும்.
இந்த மைதானம் நாட்டிலுள்ள பல வளரும் வீரர்களை ஊக்குவிக்கும். இந்திய அணி எஃப்ஐஎச் உலகக் கோப்பையை வென்றால், அணியின் ஒவ்வொரு வீரருக்கும் ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும்.
இந்திய அணி வீரர்களுக்கு எனது வாழ்த்துக்கள். அவர்கள் கோப்பையை வெல்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
சென்னையில் ஜெயின் சமூகத்தினர் ஆர்ப்பாட்டம்!
குடும்பத்தை வீட்டுக்குள் பூட்டி வைத்து மிரட்டிய இளைஞர்: சென்னையில் பரபரப்பு!