இன்று (அக்டோபர் 16) நடைபெற்ற டி20 உலகக்கோப்பை முதல் போட்டியில் பலம் வாய்ந்த இலங்கை அணியை 55 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக விளையாடிய நமீபியா அணி வீழ்த்தியது.
நடப்பாண்டு டி20 உலகக்கோப்பை போட்டி ஆஸ்திரேலியாவில் இன்று முதல் தொடங்கியது.
முதல் சுற்றுப் போட்டியில் ஐசிசி தரவரிசை பட்டியலில் 8வது இடத்தில் இருக்கும் இலங்கை அணி, 18வது இடத்தில் இருக்கும் நமீபியாவை எதிர்கொண்டது.
சமீபத்தில் ஆசியக்கோப்பையை இலங்கை அணி வென்றதால், கத்துக்குட்டி அணியான நமீபியாவை எளிதில் சுருட்டி எறியும் என்று எதிர்பார்த்தனர்.
அதிரடி காட்டிய நமீபியா!
டாஸ் வென்று இலங்கை அணி, முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய நமீபியா, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்களை இழந்து 163 ரன்களைக் குவித்தது.
அந்த அணியின் தொடக்க வீரர்களான மைக்கேல்(3) மற்றும் டிவன்(9) ரன்களில் ஆட்டமிழந்த போதும், அடுத்து வந்த வீரர்கள் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இலங்கையின் பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்டு அடித்து ஆடி அதிகபட்சமாக ஜான் ஃபிரைலின்க் 44(28) ரன்களும், ஜே.ஜே ஸ்மிட் 31(16) ரன்களும் குவித்தனர்.

இலங்கை அணியில் பிரமோத் மதுஷன் 4 ஓவர்கள் வீசி 37 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்கள் எடுத்தார். தீக்ஷனா, சமீரா, ஹசரங்கா ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
இதனை தொடர்ந்து 164 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது.
தத்தளித்த இலங்கை!
தொடக்க வீரர்களாக நிஷாங்கா மற்றும் குஷால் மெண்டிஷ் களமிறங்கினர்.
நமீபியாவை கத்துக்குட்டி அணிதானே என்று இலங்கை வீரர்கள் கருதினார்களா இல்லையா என்று தெரியவில்லை. ஆனால் ஆரம்பம் முதலே நமீபியாவின் பந்துவீச்சு கட்டுக்கோப்புடன் காணப்பட்டது.
நமீபியாவின் பந்துவீச்சில் தடுமாறிய இலங்கையின் முன்னணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இதனால் 3.3 ஓவர்களில் 21 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது இலங்கை அணி.
பின்னர் களமிறங்கிய கேப்டன் ஷனகா மற்றும் ராஜபக்ஷா ஆகியோர் அணியை சரிவிலிருந்து மீட்கும் முயற்சியில் பொறுமையாக மட்டையை சுழற்றினர்.

எனினும் அவர்களாலும் நமீபியாவின் பந்துவீச்சில் தாக்குபிடிக்க முடியவில்லை. அவர்களை தொடர்ந்து வந்த இலங்கை அணி வீரர்களும் மைதானத்தை சுற்றி பார்த்துவிட்டு பெவிலியனுக்கு திரும்பும் காட்சிகளே அரங்கேறியது.
வெற்றி வாகை சூடிய நமீபியா!
முடிவில் 19 ஒவர்களில் 108 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது இலங்கை அணி. இதனால் 55 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று டி20 உலகக்கோப்பையை அபாரமாக தொடங்கி வைத்தது நமீபியா.
இலங்கை அணியில் ஒரு வீரர்கள் கூட 30 ரன்களை தாண்டாத நிலையில், 7 வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களிலேயே விக்கெட்டை பறிகொடுத்தனர்.

நமீபியா தரப்பில் டேவீட் வீஸ், பெர்னார்ட் ஸ்கால்ட்ஸ், ஷிகோங்கோ, ஃபிரைலின்க் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், ஜே.ஜே.ஸ்மித் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார்.
பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் அபாரமாக விளையாடிய ஜான் ஃபிரைலின்க் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
கிறிஸ்டோபர் ஜெமா
பாஜகவுடன் சமரசமா?: சிரித்துக்கொண்டே பதிலளித்த மு.க.ஸ்டாலின்
திக்… திக்…நிமிடங்கள் : குழந்தையின் உயிரை காப்பாற்றிய ஆம்புலன்ஸ் டிரைவர்!