T20 World Cup 2024: 2024 டி20 உலகக்கோப்பை தொடர் ஜூன் 2 துவங்கி சுவாரஸ்யமாக நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் அமெரிக்கா வாகை சூடிய நிலையில், 2வது போட்டியில் மேற்கிந்திய தீவுகள் த்ரில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், இன்று (ஜூன் 3) நடைபெற்ற 3வது லீக் சுற்று ஆட்டத்தில், குரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ள நமீபியா மற்றும் ஓமன் ஆகிய அணிகள் மோதிக்கொண்டன.
பார்படாஸில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், முதலில் டாஸ் வென்ற நமீபியா அணியின் கேப்டன் கெர்ஹார்ட் எராஸ்மஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதை தொடர்ந்து களமிறங்கிய ஓமன் அணி, முதல் 3 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது. அடுத்து வந்த ஜீசன் மக்சூத் (22 ரன்கள்), கலீத் கைல் (34 ரன்கள்) மட்டும் பொறுப்பாக விளையாடி ரன்கள் சேர்க்க, ஓமன் அணி 109 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. நமீபியா அணிக்காக ரூபென் ட்ரம்பெல்மன் 4 விக்கெட்களையும், டேவிட் வைஸ் 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
பின் 110 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய நமீபியா அணிக்கு, டாப் ஆர்டரில் வந்த நிகோலஸ் டாவின் 24 ரன்கள், ஜான் பிரைலின்க் 45 ரன்கள் சேர்த்தனர். இருந்தபோதும், அடுத்து வந்தவர்கள் தடுமாறியதால், 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு நமீபியா அணியும் 109 ரன்கள் மட்டுமே சேர்ந்திருந்தது.
https://x.com/tajal_noor/status/1797477936255381977/video/1
இதை தொடர்ந்து, ஆட்டம் சூப்பர் ஓவருக்கு சென்றது. அதில் முதலில் பேட்டிங் செய்த நமீபியாவுக்கு டேவிட் வைஸ் 13 (4) ரன்கள், கெர்ஹார்ட் எராஸ்மஸ் 8 (2) ரன்களையும் சேர்த்தனர். இதனால், நமீபியா 6 பந்துகளில் 21 ரன்கள் குவித்தது.
22 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஓமன் அணி, டேவிட் வைஸ் வீசிய சூப்பர் ஓவரில் ஒரு விக்கெட்டை இழந்து 10 ரன்கள் மட்டுமே சேர்க்க, 11 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
நமீபியாவுக்கு கடைசி வரை சிறப்பாக விளையாடிய டேவிட் வைஸ், இப்போட்டிக்கான ‘ஆட்ட நாயகன்’ விருதை வென்றார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– மகிழ்
T20 World Cup 2024: மேற்கிந்திய தீவுகளுக்கு தோல்வி பயத்தை காட்டிய பப்புவா நியூ கினியா
கலைஞர் திருவுருவ படத்திற்கு டெல்லியில் மரியாதை : ராகுல், சோனியா புகழாரம்!