”பிசிசிஐ 30வயது கடந்த வீரர்களை தெருவில் போகும் 80வயது முதியவர்களாக பார்க்கிறார்கள்” என்று தமிழ்நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் முரளி விஜய் வேதனை தெரிவித்துள்ளார்.
ஒரு காலத்தில் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்தவர் 38 வயதான முரளி விஜய். கடந்த 5 வருடங்களுக்கு மேலாக கிரிக்கெட்டில் எங்கு இருக்கிறார் என்ற தெரியாத நிலையிலேயே அவர் இருந்து வருகிறார்.
இந்திய கிரிக்கெட்டில் அஸ்வின், வாஷிங்டன் சுந்தர், வருண் சக்கரவர்த்தி, நடராஜன், தினேஷ் கார்த்திக் என தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்கள் கலக்கி வருகின்றனர். ஆனால் முரளிவிஜய்யின் நிலைமை அப்படி இல்லை.
2014ம்ஆண்டு இங்கிலாந்தில் நடந்த டெஸ்ட் தொடரில் முரளிவிஜய்யின் ஆட்டம் பலராலும் பாராட்டப்பட்டது.
விராட் கோலி ஆடிய மிக மோசமான தொடரான அதில் தொடக்க ஆட்டக்காரரான முரளி விஜய் மொத்தமாக 1000பந்துகளுக்கும் மேல் எதிர்கொண்டு உறுதியுடன் விளையாடினார்.
அதனைத் தொடர்ந்து கடைசியாக 2018ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் பெர்த்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்காக விளையாடினார்.
பின்னர் மோசமான பார்ம் காரணமாக இந்திய அணியில் முரளிவிஜய் இருந்து நீக்கப்பட்டார். அதன்பிறகு இந்திய அணியில் அவர் இடம்பெறவில்லை.
ரஞ்சி கோப்பையிலும் 2019ம் ஆண்டுக்கு பிறகு விளையாடவில்லை.
இந்தியாவுக்காக 61 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 3928 ரன்களும், 17 ஒருநாள் போட்டிகளில் 339 ரன்களும் முரளி விஜய் குவித்துள்ளார்.
இந்நிலையில் தான் தனது நிலைமை குறித்து WV வித் ஸ்போர்ட்ஸ்டார் என்ற பத்திரிக்கை செய்திக்காக தனது வருத்தத்தை கொட்டியுள்ளார்.
அவர், ”கிட்டத்தட்ட பிசிசிஐ உடன் எனக்கு இருந்த அனைத்து தொடர்புகளும் முடிந்துவிட்டது. எனினும் இன்னும் சிறிது காலம் கிரிக்கெட் விளையாட விரும்புகிறேன். தற்போது வெளிநாட்டு கிரிக்கெட் தொடர்களில் வாய்ப்புகளைத் தேடி வருகிறேன்.
இந்திய அணியில் ஒரு வீரர் 30 வயதை கடந்துவிட்டால் தெருவில் நடந்து செல்லும் 80 வயதான முதியவர் போல பார்க்கின்றனர் என்று நினைக்கிறேன். இதனை ஊடகங்கள் தான் வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும்.
என்னால் முடிந்தவரை நான் சிறப்பாக ஆட முடியும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, அதற்கான வாய்ப்புகளே இங்கு எனக்கு தரப்படவில்லை. இதனால் வெளிநாட்டில் வாய்ப்பு தேடி அலைய வேண்டியுள்ளது” என்று முரளி விஜய் வேதனை தெரிவித்துள்ளார்.
தற்போது இந்திய கிரிக்கெட்டில் அதிரடி புயலாக வலம் வரும் சூர்ய குமார் யாதவ் குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் சல்மான் பட் பாராட்டி இருந்தார்.
அவர் கூறுகையில் “சூர்யகுமார் 30வயதுக்கு மேல் தான் சர்வதேச கிரிக்கெட்டில் ஆடவே தொடங்கினார் என படித்திருக்கிறேன்.
நல்லவேளை சூர்யகுமார் யாதவ் இந்தியராக பிறந்துவிட்டார். ஒருவேளை அவர் பாகிஸ்தானியராக இருந்திருந்தால், 30 வயதுக்கு மேல் கிரிக்கெட்டில் ஆட வாய்ப்பே பெற்றிருக்கமாட்டார்.” என்று தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் அதே 30 வயது குறித்து முரளிவிஜய் தற்போது வேதனை தெரிவித்திருப்பது இந்திய கிரிக்கெட்டில் உள்ள முரண்பாட்டினை வெளிப்படுத்தியுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
“பெண்தான் சிறுநீர் கழித்தார்” – கதையையே மாற்றிய ஷங்கர்!
ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு அதிமுக ஆதரவு!