புதிய வரலாற்று சாதனை படைத்த மும்பை இந்தியன்ஸ்!

விளையாட்டு

ஐபிஎல் தொடரில், ஹர்திக் பாண்டியா தலைமையில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி முதல் 3 போட்டிகளில் படுதோல்விகளை சந்தித்தது. இதனால், அந்த அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்திற்கு சென்றது. இது ரசிகர்களிடையே பெரும் விமர்சனத்தை பெற்றது.

இந்நிலையில், இந்த தொடரில் தனது 4-வது போட்டியில் மும்பை அணி டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக களமிறங்கியது. மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த இப்போட்டியில், டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் முதலில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதை தொடர்ந்து களமிறங்கிய மும்பை அணி, ரோகித் சர்மா – இஷான் கிஷனின் அதிரடியான துவக்கம், டிம் டேவிட் – ரொமாரியோ ஷெப்பர்ட்டின் அதிரடி பினிஷிங்கால், 20 ஓவர்களில் 234 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்டியது. ரோகித் சர்மா 49 (27) ரன்கள், இஷான் கிஷன் 42 (23) ரன்கள், டிம் டேவிட் 45 (21) ரன்கள், ரொமாரியோ ஷெப்பர்ட் 39 (10) ரன்கள் குவித்தனர்.

பின், 235 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு, பிரித்வி ஷா 66 (40) ரன்கள் குவித்து அதிரடியான துவக்கம் அளித்தார். அபிஷேக் போரல் 41 (31) ரன்கள் சேர்த்து ஆறுதல் அளித்தார். அடுத்து வந்த ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் கடைசி வரை போராடி 25 பந்துகளில் 71 ரன்கள் விளாசியபோதும், மற்ற அனைவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, டெல்லி அணியால் 20 ஓவர்களில் 205 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது.

இதன்மூலம், மும்பை அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் இந்த தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. அதுமட்டுமின்றி, இந்த வெற்றியின் மூலம், ஒரு வரலாற்று சாதனையையும் மும்பை இந்தியன்ஸ் அணி பெற்றுள்ளது. டி20 கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் அணி பெரும் 150-வது வெற்றி இது என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்மூலம், உலகிலேயே டி20 கிரிக்கெட்டில் 150 வெற்றிகளை பெற்ற முதல் அணி என்ற பெருமையை மும்பை இந்தியன்ஸ் அணி பெற்றுள்ளது. இந்த பட்டியலில் 148-வெற்றிகளுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2வது இடத்தில் உள்ளது.

டி20 கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளை பெற்ற அணிகள்

1) மும்பை இந்தியன்ஸ் – 150 வெற்றிகள் (273 போட்டிகளில்)
2) சென்னை சூப்பர் கிங்ஸ் – 148 வெற்றிகள் (253 போட்டிகளில்)
3) இந்தியா – 144 வெற்றிகள் (223 போட்டிகளில்)
4) லங்காஷயர் – 143 வெற்றிகள் (248 போட்டிகளில்)
5) நாட்டிங்காம்ஷயர் – 142 வெற்றிகள் (244 போட்டிகளில்)

இப்போட்டியில் ரோகித் சர்மாவும் பல புதிய மைல்கற்களை எட்டியுள்ளார். இப்போட்டியில், ஜெய் ரிச்சர்ட்சன் கேட்சை பிடித்த ரோகித் சர்மா, ஐபிஎல் போட்டிகளில் தனது 100வது கேட்சை பிடித்துள்ளார். ஒரு பீல்டராக ஐபிஎல் தொடரில் 100 கேட்ச்களை பிடித்த வீரர்கள் பட்டியலில், விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, பொல்லார்டு ஆகியோரை அடுத்து 4வது வீரராக ரோகித் சர்மா இணைந்துள்ளார்.

மேலும், இப்போட்டியில் 49 ரன்கள் சேர்த்த ரோகித் சர்மா, டெல்லி அணிக்கு எதிராக மட்டும் 1000 ரன்களை பூர்த்தி செய்துள்ளார். இதன்மூலம், ஐபிஎல் தொடர்களில் 2 அணிகளுக்கு எதிராக 1000-க்கும் அதிகமான ரன்களை குவித்த 3வது வீரர் என்ற பெருமையை ரோகித் பெற்றுள்ளார். முன்னதாக, கொல்கத்தாவுக்கு எதிராக மட்டும் 1000 ரன்களை ரோகித் சர்மா குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்பட்டியலில், டேவிட் வார்னர் (பஞ்சாப் & கொல்கத்தா), விராட் கோலி (டெல்லி & சென்னை) ஆகியோர் முதல் 2 இடங்களில் உள்ளனர்.

– மகிழ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

நயினார் நாகேந்திரன் மீது வழக்குப்பதிவு!

‘ஹாட்ஸ்பாட்’ படம் பாக்ஸ் ஆபீஸில் வெற்றி இல்லை, ஆனால்… தயாரிப்பாளர் பேச்சு!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *