மும்பை இந்தியன்ஸ் கிரிக்கெட் அணி தனது குடும்பம் என இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் ஷர்மா கூறியுள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் என்று சொன்னாலே தற்போது ரோகித் ஷர்மா தான் ரசிகர்கள் நினைவிற்கு வருவார். கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் 7.2 கோடி ரூபாய்க்கு மும்பை இந்தியன்ஸ் அணியால் வாங்கப்பட்ட இவர் தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியுடன் 12 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.
கிரிக்கெட் தொடர்களில் ரன்களை குவித்தது மட்டுமின்றி ரோகித் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாகவும் செயல்பட்டார். 2013, 2015, 2017, 2019 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் ரோகித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி தொடரை கைப்பற்றி கோப்பையை வென்றது.
இதன் மூலம் இந்திய அணியில் மிகவும் முக்கியமான வீரராகவும் ரோகித் ஷர்மா பார்க்கப்படுகிறார்.
இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் 12 ஆண்டுகளை நிறைவு செய்த அனுபவங்களைப் பகிர்ந்த ரோகித் ஷர்மா, “மும்பை இந்தியன்ஸில் இணைந்து 12 வருடங்கள் ஆகிறது என்பதை என்னால் நம்ப முடியவில்லை. இது எனக்கு மிகவும் உற்சாகமான மற்றும் உணர்ச்சிகரமான பயணமாக அமைந்தது.
மும்பை இந்தியன்ஸ் எனது குடும்பம், எனது சக வீரர்கள், ரசிகர்கள் மற்றும் நிர்வாகத்தின் அன்பிற்காக நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். மேலும் பல நினைவுகளை உருவாக்கவும், எங்கள் பால்டனுக்கு மேலும் புன்னகையை பரப்பவும் காத்திருக்கிறேன்” என்று கூறினார்.
35 வயதான ரோகித் ஷர்மா மும்பை அணிக்காக 182 போட்டிகளில் விளையாடி 4709 ரன்கள் குவித்துள்ளார். அதிகபட்ச ஸ்கோர் 109 ரன்கள் அடித்த அவர் ,32 அரைசதங்கள் அடித்துள்ளார் .
ஐபிஎல் தொடரில் எம்.எஸ். தோனிக்கு பிறகு அதிக காலம் பதவி வகிக்கும் வீரராகவும் மும்பை இந்தியன்ஸ் கேப்டனாகவும் இருக்கிறார் ரோகித் ஷர்மா. அதிக பவுண்டரிகள், அதிக 50+ ஸ்கோர்கள், அதிக ஆட்ட நாயகன் விருதுகள் போன்ற சாதனைகளைப் படைத்துள்ளார்.
ஜனவரி 10 ஆம் தேதி தொடங்கவுள்ள இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் கேப்டனாக களமிறங்கவுள்ளார்.
மோனிஷா
புற்களுக்கு ‘பச்சை ஸ்பிரே’ அடிக்கும் பாஜக – வீடியோ வைரல்
ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் இணைந்த பிரபல நடிகர்