IPL 2024 : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்துள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி.
ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று (ஏப்ரல் 12) நடைபெற்ற 25ஆவது லீக் ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை அணியும், ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான பெங்களூரு அணியும் மோதின.
டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.
அதன்படி களமிறங்கிய ஆர்சிபி அணியில் கடந்த போட்டியில் சதமடித்து அசத்திய விராட் கோலி, இன்று பும்ராவின் பந்தில் தடுமாறிய நிலையில் முதல் விக்கெட்டாக வெறும் 3 ரன்களுக்கு வெளியேறினார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய வில் ஜாக்ஸ் 8 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து கேப்டன் டூ பிளெசிஸ் ஒருபுறம் பொறுமை காட்ட, மறுபுறம் களமிறங்கிய ராஜத் பட்டிதார் அதிரடியாக விளையாடினார்.
அடுத்தடுத்து 2 சிக்சர்களை பறக்கவிட்டு 25 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்த பட்டிதார்(50) அடுத்த பந்திலேயே தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
அடுத்து களமிறங்கிய மேக்ஸ்வெல் டக் அவுட் ஆக, பொறுமையாக விளையாடிய கேப்டன் டு பிளெசிஸ் (61) நடப்பு ஐபிஎல் தொடரில் தனது முதல் அரைசதத்தைப் பதிவு செய்து வெளியேறினார்.
இதனையடுத்து வந்த லாம்ரோர்(0), சவுரவ் சவுகான்(9) மற்றும் விஜயகுமார் வைசாக்(0) அடுத்தடுத்து ஆட்டமிழக்க, கடைசி கட்டத்தில் களமிறங்கிய தினேஷ் கார்த்திக்(53) பந்தை நாலாபுறமும் சிதறவிட, 22 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்களைக் குவித்தது ஆர்.சி.பி அணி.
மும்பை இந்தியன்ஸ் அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஜஸ்ப்ரித் பும்ரா 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஐபிஎல் தொடரில் பும்ரா 5 விக்கெட் எடுப்பது இதுவே முதல் முறையாகும்.
முதல் விக்கெட்டுக்கு 101 ரன்கள்!
இதனைத்தொடர்ந்து 197 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர்களான இஷான் கிஷன் – ரோகித் சர்மா ஜோடி அதிரடியாக விளையாடி முதல் விக்கெட்டுக்கு 101 ரன்கள் குவித்தது.
34 பந்துகளில் 7 பவுண்டரி 5 சிக்ஸருடன் 69 ரன்களில் வெளியேறினார் இஷான் கிஷான். அவரைத்தொடர்ந்து தன் பங்கிற்கு 3 பவுண்டரி 3 சிக்சர் பறக்கவிட்ட ரோகித் சர்மா 38 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து 3வது விக்கெட்டுக்கு இணைந்த சூர்யகுமார் யாதவ் மற்றும் கேப்டன் ஹர்திக் பாண்டியா வாணவேடிக்கை நிகழ்த்தினர்.
அடுத்தடுத்து பந்தை சிக்ஸருக்கு பறக்கவிட்ட சூர்யகுமார் 17 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து மிரட்டினார். அவர் 5 பவுண்டரி, 4 சிக்ஸர்களுடன் 52 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இறுதியில் 6 பந்துகளை சந்தித்த ஹர்திக் பாண்டியா(21) சிக்சர் அடித்து அணியை வெற்றி பெற செய்தார்.
ஆர்.சி.பி அணியின் பவுலர்களின் பந்துவீச்சை களமிறங்கிய 5 பேட்ஸ்மேன்களும் இப்படி நொறுக்கிய தள்ளியதால், மும்பை இந்தியன்ஸ் அணி 15.3 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தியது.
இதன்மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியானது தங்களது இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
அதேவேளையில் தொடர்ந்து 4வது முறையாக தோல்வியை தழுவியுள்ளது டூ பிளெசியின் பெங்களூர் அணி.
இந்த போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி மும்பை அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்த பும்ரா ஆட்டநாயகன் விருது பெற்றார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
அவரு எங்க இருக்காரு தெரியுமா? : அப்டேட் குமாரு